ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக-வை ‘தீய சக்தி’ என்றும் தனது கட்சியை ‘தூய சக்தி’ என்றும் அடுக்கு மொழியில் விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தற்போது தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
சுயசிந்தனை இல்லை – திருமாவளவன் காட்டம்:
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், விஜய்யின் பேச்சு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குக் கூறியதாவது,
“தவெக தலைவர் விஜய்க்கு யாரோ தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்கு மொழியில் பேசச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அவர் சுயமாகச் சிந்தித்துப் பேசுவதாகத் தெரியவில்லை. யாரோ உசுப்பேற்றி எழுதித் தந்ததை அப்படியே மேடையில் ஒப்பித்து வருகிறார். அரசியலில் இத்தகைய அடுக்கு மொழி வசனங்களால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது.”
மக்கள் முடிவு செய்வார்கள்!:
மேலும் அவர் பேசுகையில், “யார் தூய சக்தி, யார் தீய சக்தி என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களே தவிர, மேடையில் பேசும் தனிநபர் அல்ல. தேர்தல் களத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகும்” என்று குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் மோதல்:
சமீபகாலமாக தவெக மற்றும் விசிக இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் நகர்வுகள் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் “தீய சக்தி” என்ற விமர்சனம் திமுக-வை மட்டுமல்லாது, அந்தக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளையும் சீண்டும் விதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஈரோடு மேடைப் பேச்சுக்குப் பிறகு விஜய் – திருமா மோதல் தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.