திருச்செந்தூர்: ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்திற்குள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அரசியல் கோஷங்களை எழுப்பியதுடன், பக்தர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடையை மீறி வீடியோ.. கோஷம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க கோவில் நிர்வாகம் ஏற்கனவே கடும் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர், தடையை மீறி செல்போன்களில் வீடியோ எடுத்ததுடன், “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என முழக்கமிட்டனர். முருகனுக்குப் போடப்படும் “அரோகரா” கோஷத்தை அரசியல் தலைவருடன் இணைத்து கோவிலுக்குள் முழங்கியது அங்கிருந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.

அறநிலையத்துறை எங்க கையில்.. வாக்கு சேகரிப்பு:
கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் சென்ற தொண்டர்கள், தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து திடீரென வாக்கு சேகரிக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் பேசியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
“இன்னும் ஒரு வருடம் தான்.. அடுத்த வருடம் அறநிலையத்துறையை நாங்களே ‘டேக்-ஓவர்’ (Take over) செய்துவிடுவோம். அதன் பிறகு நீங்கள் இப்படி வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டியதில்லை. அனைவருக்கும் பாஸ் வழங்கி எளிதாகத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வோம்”
என்று வாக்குறுதி அளிக்கும் பாணியில் அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம்:
புனிதமான ஆன்மீகத் தலங்களை அரசியல் களமாக மாற்றுவது ஏற்புடையதல்ல எனப் பக்தர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில், அரசியல் கோஷங்களையும் கட்சி விளம்பரங்களையும் திணிப்பது அநாகரிகமானது” எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவில் வளாகத்திற்குள் இத்தகைய அத்துமீறல்கள் நடக்கும்போது பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.