முரட்டு பக்தரை பாத்திருப்பீங்க.. ஆனா முரட்டு அடிமைய பாத்திருக்கீங்களா?.. EPS-யை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்

முரட்டுப் பக்தர்களைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் அமித் ஷாவின் முரட்டு அடிமையை இப்போதுதான் பார்க்கிறோம் என எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

பக்தர் இல்ல… அமித் ஷாவின் அடிமை!
திருவொற்றியூரில் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, “அரசியலில் முரட்டுத் தொண்டர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அமித் ஷாவின் ‘முரட்டு அடிமை’ யார் தெரியுமா? அது நம் ஊர் எடப்பாடி பழனிசாமி தான். பாஜக என்ன சொன்னாலும் உடனே தலையாட்டும் அவர், அந்தத் தூக்கலான அடிமைத்தனத்தால் அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்” என கிண்டலடித்தார்.

பாசிசம் Vs அடிமைத்தனம்!
ஒன்றிய அரசு மற்றும் அதிமுக இடையிலான உறவை விளக்கிய அவர், ஒன்றிய அரசு (பாஜக) அதன் அடையாளம் பாசிசம்.
இதன் அடையாளம் வெறும் அடிமைத்தனம். “இந்த இரண்டுமே தமிழகத்திற்கு ஆபத்தானது. பாஜக ஒரு பக்கம் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது என்றால், அதற்குப் பாதையை அமைத்துக் கொடுக்கும் வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

துரோகத்திற்கு நோபல் பரிசு!
தொடர்ந்து எடப்பாடியைச் சாடிய உதயநிதி, “தனக்கு வாழ்வளித்தவர்களுக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ‘துரோகத்திற்கான நோபல் பரிசு’ ஒன்று இருந்தால் அதைத் தாராளமாக வழங்கலாம். புதுப்புது அடிமைகள் (நடிகர் விஜய்யைக் குறிப்பிடுவதாகப் பார்க்கப்படுகிறது) அரசியல் களத்திற்கு வந்தாலும், திமுகவின் செல்வாக்கைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என அதிரடியாகக் கூறினார்.

நீங்க என்ன தகுதி பத்தி பேசுறது?
தனது துணை முதலமைச்சர் பதவியைக் கேள்வி எழுப்பிய எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த அவர், “நான் துணை முதல்வர் ஆனதற்கு என்ன தகுதி இருக்கிறது என எடப்பாடி கேட்கிறார். தவழ்ந்து சென்று பதவி வாங்கிய உங்களுக்குத் தகுதியைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? மக்களின் ஆதரவோடு நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்” எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

Leave a Comment