உங்க பருப்பு இங்க வேகாது மிஸ்டர் அமித்ஷா.. சங்கிகள் சத்தமில்லாமல் இருக்கணும்.. பாஜகவிற்கு உதயநிதி எச்சரிக்கை!

“டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டை மிரட்டப் பார்க்காதீர்கள், உங்கள் பருப்பு இங்கே வேகாது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகக் கூறி, அதிமுகவை ‘அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் புதிய பெயர் சூட்டி விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

டெல்லிக்கு மிரட்டல் தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பு!
விழாவில் பேசிய அவர், “பீகாரை வென்றுவிட்டோம், அடுத்து தமிழ்நாடு தான்; தயாராக இருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து அமித்ஷா சொல்கிறார். இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் அடிமைக் கூட்டம் பயப்படலாம். ஆனால், கலைஞரின் உடன்பிறப்புகளும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். வடக்கே நீங்கள் ஆளலாம், ஆனால் உங்கள் பருப்பு தமிழ்நாட்டில் என்றுமே வேகாது,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

தமிழகத்தின் தனித்துவம் இதுதான்!
தமிழகத்தின் மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்திய அவர், “தமிழ்நாட்டிற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. இங்கே கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கு கேக் கொடுப்போம், ரம்ஜான் அன்று அவர்கள் பிரியாணி தருவார்கள், பொங்கலன்று அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். மதக் கலவரத்தை உருவாக்கி இங்கே ஜெயிக்கலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். அப்படி நினைத்தால் தமிழக மக்கள் உங்கள் முகத்தில் கரியைப் பூசுவார்கள். தமிழ்நாடு என்னைக்குமே டெல்லிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ தான்,” என்றார்.

அதிமுகவா? அமித்ஷா திமுகவா?:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய உதயநிதி, “இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மொத்தமாக அமித்ஷாவின் காலில் சரணடைந்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று ‘அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக’ மாறிவிட்டது. சிறுபான்மையினரை பாதுகாக்கத் துடிப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி, முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவைக் காப்பாற்றட்டும்,” என விமர்சித்தார்.

சங்கிகள் தமிழ்நாட்டிற்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்தாலும், திராவிட மாடல் அரசு அவற்றை முறியடிக்கும் என்றும், 2026 தேர்தலிலும் இதே போன்ற பாசிச சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Comment