டிரம்பின் அடுத்த குறி இந்தியப் பெருங்கடல்களுக்கு.. சாகோஸ் தீவுக்காக ட்ரம்ப் போடும் புது சண்டை..

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சாகோஸ் தீவுகளை (Chagos Islands) மொரீசியஸிடம் ஒப்படைக்கும் பிரிட்டனின் முடிவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இதனை “மகா முட்டாள்தனம்” என்று வர்ணித்துள்ள அவர், இந்த விவகாரத்தை கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்கும் கோரிக்கையுடன் இணைத்துப் பேசியுள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?
கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில், பல தசாப்தங்களாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீசியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது. 2025 மே மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அந்தத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியா (Diego Garcia)-வில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளம் மட்டும் அடுத்த 99 ஆண்டுகளுக்கு பிரிட்டனின் குத்தகையில் இருக்கும் என உறுதி செய்யப்பட்டது.

ட்ரம்ப்பின் திடீர் எதிர்ப்பு:
அதிபர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “நமது ‘புத்திசாலி’ நேட்டோ நட்பு நாடான பிரிட்டன், எந்தக் காரணமும் இல்லாமல் டியாகோ கார்சியா தளத்தை மொரீசியஸிடம் தாரைவார்க்கிறது. இது பலவீனத்தின் அடையாளம். இதை சீனா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் நாம் கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டியது அவசியமாகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மொரீசியஸின் அதிரடி பதிலடி:
ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்திற்கு மொரீசியஸ் அரசு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “சாகோஸ் தீவுகள் மீதான எங்களது உரிமை என்பது சர்வதேச நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இது எங்களது இறையாண்மை தொடர்பான விஷயம். இது முடிந்துபோன கதை. இதில் இனி விவாதிப்பதற்கோ அல்லது சமரசம் செய்வதற்கோ இடமே இல்லை” என்று மொரீசியஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏன் இந்தத் தீவு இவ்வளவு முக்கியம்?
ராணுவ முக்கியத்துவம்:
டியாகோ கார்சியா தளம் அமெரிக்காவின் மிக ரகசியமான மற்றும் சக்திவாய்ந்த விமானப்படை மற்றும் கடற்படைத் தளமாகும். இங்கிருந்துதான் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் மீது அமெரிக்கா கண்காணிப்பு மேற்கொள்கிறது.

இந்தியாவின் நிலைப்பாடு:
சாகோஸ் தீவுகள் மொரீசியஸிடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வருகிறது. இது ஒரு காலனித்துவ விடுதலையாகவே பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்பின் இந்த எதிர்ப்பு பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்தாகுமா அல்லது மொரீசியஸ் தனது உரிமையை நிலைநாட்டி தீவுகளை முழுமையாகப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment