தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரசியலுக்கு வரக் காரணம் என்ன என்பது குறித்துப் பல யூகங்கள் நிலவி வந்த நிலையில், அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் (எஸ்.ஏ.சி) சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் கொடிகட்டிப் பறந்து, அதிகபட்ச சம்பளம் வாங்கும் நிலையில் இருந்த விஜய், அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் மக்கள் சேவைக்காக அரசியல் களத்திற்கு வந்தார் என்பது குறித்து எஸ்.ஏ.சி விளக்கம் அளித்துள்ளார்.
மனதில் உருவான சேவை எண்ணம் :
எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சினிமாவில் நடித்து எவ்வளவோ சம்பாதிக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உருவாவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
அந்தப் பல காரணங்களில், விஜய் நடித்த சில படங்களும் முக்கியப் பங்கு வகித்ததாக எஸ்.ஏ.சி சுட்டிக்காட்டினார்.
“அவர் நடித்த சில படங்கள், அவர் சமூகப் பிரச்சனைகளைப் பார்க்கும் விதத்தை மாற்றியிருக்கலாம். குறிப்பாக, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்தபோது, அந்தச் சிந்தனைகள் ஆழமாகப் பதிந்திருக்கலாம். அதுவே அவரை மக்கள் சேவை செய்யத் தூண்டியது” என்று எஸ்.ஏ.சி விளக்கம் அளித்தார்.
திரைப்படங்களில் சமூக நீதிக்காகப் போராடும் கதாநாயகனாக நடித்த விஜய், நிஜ வாழ்க்கையிலும் அதே கடமையைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றியதாக அவரது தந்தை எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னணியில், அவரது திரைப்படங்களும் ஒரு கருவியாகச் செயல்பட்டன என்ற இந்தச் சுவாரஸ்யமான தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.