Connect with us

latest news

இந்தியாவிலும் அறிமுகமானது கூகுள் பார்டு – உடனே பயன்படுத்துவது எப்படி?

Published

on

Google Bard

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையாளரான கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிவித்தது. இதில் சாட்ஜிபிடி சேவைக்கு போட்டியை ஏற்படுத்தும் பார்டு (Bard) சாட்பாட் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கூகுள் பார்டு சாட்பாட் சேவை தற்போது உலகின் 180-க்கும் அதிக நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுதவிர பார்டு சேவையை பயன்படுத்த வெயிட்லிஸ்ட்-இல் காத்திருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் கூகுள் நீக்கி இருக்கிறது. ஏ.ஐ. சாட்பாட் பிரிவில் ஒபன்ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் தனது பார்டு சேவையில் புதிய அம்சங்களை வழங்கி இருக்கிறது.

Google Bard

Google Bard

“கூடுதலாக மேம்படுத்தல்கள் செய்து, புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதன் காரணமாக பார்டு சேவையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களது கருத்துக்களை பெற நினைக்கிறோம். இன்றுமுதல் நாங்கள் வெயிட்லிஸ்ட்-ஐ நீக்கி, பார்டு சேவையை உலகின் 180-க்கும் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடுகிறோம். விரைவில் மேலும் பல்வேறு பகுதிகளிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது,” என்று கூகுள் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.

“நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறியதை போன்றே, பெரிய லாங்குவேஜ் மாடல்கள் இன்னமும் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன. நாங்கள் இந்த பிரிவை விரிவுப்படுத்தி, தொடர்ந்து அதிக தரமுள்ள சேவையை வழங்கி, எங்களது ஏ.ஐ. கொள்கைகளையும் கடைப்பிடிப்போம்,” என்றும் அந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளில் பார்டு சேவை கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது மட்டுமின்றி 40 மொழிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. இதன் மூலம் பார்டு சேவையை ஏராளமான மொழிகளில் பயன்படுத்த முடியும். பார்டு சாட்பாட் கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மற்றும் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடலான PaLM 2 மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பார்டு சேவையில் ஏராளமான புதிய சேவைகள், கோடிங் திறன்கள், மேம்பட்ட கணிதம் மற்றும் ஏராளமான திறன்கள் கிடைக்கின்றன.

Google Bard

Google Bard

இந்தியாவில் கூகுள் பார்டு சேவையை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?

– அதிகாரப்பூர்வ பார்டு வலைதளம் செல்ல வேண்டும். https://bard.google.com

– வலைதளத்தின் கீழ்புறம் வலதுபக்கமாக இருக்கும் டிரை மி (Try Me) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

– கூகுள் பார்டு தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்க ஐ அக்ரீ (I agree) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

– இனி வெயிட்லிஸ்ட் இன்றி கூகுள் பார்டு சேவையை இலவசமாக பயன்படுத்த துவங்கலாம்.

முன்னதாக கூகுள் பார்டு சேவை வெயிட்லிஸ்ட் முறையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. தற்போது உலகின் 180-க்கும் அதிக நாடுகளில் இந்த சாட்பாட் சேவை கிடைக்கிறது. மேலும் சில நாடுகளுக்கு இந்த சேவை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. எனினும், பார்டு சேவை அதன் பீட்டா நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக இந்த சாட்பாட் சேவையும் மற்றவைகளை போன்றே தவறுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

google news