latest news
கூகுள் மெசேஞ்சஸ் செயலியில் மேஜிக் கம்போஸ் வசதி அறிமுகம் – ஆனால் ஒரு டுவிஸ்ட்!
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த, கூகுள் I/O 2023 நிகழ்வில் அந்நிறுவனம் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றில் பெரும்பாலானவை கூகுள் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நுட்பாக புகுத்தும் வகையிலேயே இருந்தது. அந்த வகையிலான அம்சமாகவே கூகுள் நிறுவனம் ‘மேஜிக் கம்போஸ்’ (Magic Compose) எனும் அம்சத்தினை கூகுள் மெசேஞ்சஸ் செயலியில் வழங்கப் போவதாக அறிவித்து இருந்தது.
கூகுள் மெசேஞ்சஸ் செயலியில் மேஜிக் கம்போஸ் அம்சம் பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை மேம்படுத்திக் கொடுக்கும். தற்போது மேஜிக் கம்போஸ் பீட்டா வெர்ஷனாக வெளியிடும் பணிகளை கூகுள் நிறுவனம் துவங்கி இருக்கிறது. எனினும், இதில் ஒரு டுவிஸ்ட் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் அம்சம் தான் மேஜிக் கம்போஸ். இந்த அம்சம் பயனர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் மற்றும் சரிசெய்ய வேண்டிய வாக்கியப்பிழை மற்றும் இலக்கிய பிழை உள்ளிட்டவைகளை பரிந்துரைக்கும். மேலும் வார்த்தைகளை மாற்றவும் பரிந்துரை செய்யும்.
இந்த அம்சம் வழங்கும் பரிந்துரைகள் பயனர்களின் உரையாடல் நடையை மேம்படுத்துகிறது. இது பயனர்களை வெவ்வேறு வகைகளில் எழுத தூண்டுகிறது. பயனர்கள் அனுப்பும் மெசேஞ்கள் மிகச்சரியானதாகவும், தொழில்ரீதியானதாகவும் அல்லது ஷேக்ஸ்பியர் போன்ற ஆளுமைகளின் நடையிலும் மாற்றிக் கொள்ள முடியும்.
மேஜிக் கம்போஸ் அம்சம் கூகுள் பார்டு மூலம் இயக்கப்படுகிறது. பார்டு சேவையானது கூகுள் நிறுவனத்தின் சொந்த ஏ.ஐ. சாட்பாட் ஆகும். இதில்: ரீமிக்ஸ் (Remix), எக்சைடட் (Excited), சில் (Chill), ஷேக்ஸ்பியர் (Shakespeare), லிரிக்கல் (Lyrical), ஃபார்மல் (Formal) மற்றும் ஷார்ட் (Short) என ஏழு விதமான ஸ்டைல்கள் வழங்கப்படுகின்றன.
ஆரம்பக்கட்டத்தில் மேஜிக் கம்போஸ் அம்சம் RCS- வசதி கொண்ட அமெரிக்க சிம் கார்டுகளை கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெருமளவு பயனர்களுக்கு வழங்கப்படும் போது, பயனர்கள் இந்த அம்சத்தினை ஆப் செட்டிங்ஸ் மெனுவில் இருந்தபடி இயக்க முடியும். டெக்ஸ்ட் பகுதியில் இருக்கும் பென்சில் ஐகானை க்ளிக் செய்தால், ஏ.ஐ. தொழில்நுட்பமானது பயனர்கள் எழுதிய தகவல்களில் மாற்றங்கள் செய்யும்.
இது குறித்து ஆண்ட்ராய்டு போலீஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், கூகுள் நிறுவனம் பயனர்கள் அனுப்பிய கடைசி 20 மெசேஞ்களை தனது சர்வெர்களுக்கு அனுப்பிக் கொண்டு, தான் பயனர்களுக்கான பரிந்துரையை வழங்கும் என்று கூறப்படுகிறது. RCS வசதியை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் செயல்படுத்தி இருந்தாலும், பயனர்களின் முந்தைய மெசேஞ்களை இயக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.