tech news
டவுன்லோட்களில் மாஸ் காட்டிய கூகுள் போட்டோஸ் – எத்தனை கோடிகள் தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் போட்டோஸ் ஆப் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் புதிய மைல்கல் எட்டி அசத்தியுள்ளது. உலகில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் டீஃபால்ட் மேனேஜர் மற்றும் கிளவுட் ஸ்டோரேத் ஆப்-ஆக கூகுள் போட்டோஸ் இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் போட்டோஸ் ஆப் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் மற்றும் டேப்லெட் மாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் போட்டோ கேலரி செயலியாக இருந்து வருகிறது. இந்த ஆப் பயனர்கள் தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை கிளவுட் ஸ்டோரேஜில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த செயலியில் தற்போது ஏராளமான ஏஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அறிமுகமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், கூகுள் போட்டோஸ் ஆப் உலகளவில் 10 பில்லியன் அதாவது 1000 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைப்பதால், இது உண்மையில் டவுன்லோட் செய்யப்பட்ட கணக்குதானா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு இந்த செயலி 5 பில்லியன் அதாவது 500 கோடி டவுன்லோட்களை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில் கூகுள் போட்டோஸ் ஆப் ஆண்ட்ராய்டு சாதனங்களில் புகைப்படங்களை நிர்வகிக்க முதன்மை செயலியாக மாறியுள்ளது. சாம்சங், ஒன்பிளஸ் என முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடுகிறது.
ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் க்ரோம், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், கூகுள் பிளே சர்வீசஸ், கூகுள் சர்ச், யூடியூப் போன்ற செயலிகள் டவுன்லோட்களில் 1000 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.