வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தனது நான் ஸ்டாப் ஹீரோ பிளானை மேலும் ஐந்து வட்டாரங்களில் அறிமுகம் செய்துள்ளது. இதை சேர்க்கும் பட்சத்தில் வோடபோன் ஐடியாவின் நான் ஸ்டாப் ஹீரோ பிளான் நாடு முழுக்க 15 வட்டாரங்களில் கிடைக்கிறது. புதிய வட்டாரங்கள் பட்டியலில் கேரளா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் கிழக்கு உள்ளிட்டவை அடங்கும்.
வி நான் ஸ்டாப் ஹீரோ சலுகையில் நாள் முழுக்க அன்லிமிட்டெட் இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. வி சூப்பர் ஹீரோ பிளான்களில் அரை நாளுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டின் 12 வட்டாரங்களில் கிடைக்கிறது. வி ஹீரோ அன்லிமிட்டெட் சலுகைகள் இரவு முழுக்க அன்லிமிட்டெட் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது.
புதிய சலுகை நீட்டிப்பு குறித்து வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பிளான்கள் பிரீபெயிட் பிரிவில் அதிக கவனத்தை ஈர்க்கும், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் முக்கிய வட்டாரங்களில் புதிய சந்தாதாரர்களை அதிகப்படுத்தவும் இந்த பிளான் உதவியாக இருக்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி நிறுவனத்தின் நான் ஸ்டாப் ஹீரோ பிளான் தனிநபர் மற்றும் வர்த்தக நோக்கமில்லா பயன்பாட்டிற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இணைய சேவை கணக்கீடு 28 நாட்களில் 300GB டேட்டாவை கடக்கும் போது அது வர்த்தக நோக்கமுள்ள பயன்பாடாக கருதப்படும்.
டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொண்டு வரும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் புதிய சலுகைகள் அறிவிப்பும், ஏற்கனவே உள்ள சலுகைகளை மாற்றியமைத்தும் ஏராளமான அறிவிப்புகளை வோடபோன் ஐடியா வெளியிட்டு வருகிறது.