ரியல்மி நிறுவனத்தின் GT சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் நிறைந்த GT சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளன. அந்த வகையில், ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இந்திய சந்தையில் தற்போது அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்சம் ரூ. 8000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு ரூ. 8 ஆயிரமும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு ரூ. 7 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விலை குறைப்பைத் தொடர்ந்து இந்திய சந்தையில் ரியல்மி GT 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54,999 என்றும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59,999 என்றும் மாறியுள்ளது. இந்த சலுகை இன்னும் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் (அதிகபட்சம் 9 மாதங்கள் வரை மட்டும்) வழங்கப்படுகிறது. இத்துடன் மொபிகுவிக் பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக் பெற முடியும் இது ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்கும். எனினும், இந்த கேஷ்பேக் பெறுவதற்கு தனி விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 120 ஹெர்ட்ஸ் குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், புகைப்படங்களை எடுக்க 50MP சோனி IMX906 OIS கேமரா, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மற்றும் 5800mAh டைட்டன் பேட்டரி கொண்டிருக்கிறது.