ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்… ராணுவ வீரர் உயிரை காத்த கேலக்ஸி S25 அல்ட்ரா

ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி கடந்த காலங்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளாஸ்டிக், மெட்டல், டைட்டானியம் என பல்வேறு மூலப்பொருட்களால் ஆன பாடி கொண்டுள்ளன. இவை ஸ்மார்ட்போன்களை உறுதியாக வைத்திருப்பதோடு அவ்வளவு எளிதில் சேதமடையாமலும் பார்த்துக் கொள்கின்றன.

ஆரம்ப காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அதன் உறுதித்தன்மைக்கு பெயர் பெற்ற நிலையில், தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மிக கவனமுடன் அதிக தரத்தில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளன. அதன்படி பல நிறுவன ஸ்மார்ட்போன்கள் மிக உயரத்தில் இருந்து விழுந்தும் அதிக சேதங்கள் இன்றி தப்பியுள்ளதோடு, பழைய நிலையில் சீராகவும் இயங்கியுள்ளன.

இந்த வரிசையில், சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்று ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்சங் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் S25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கேலக்ஸி S25 மற்றும் கேலக்ஸி S25 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S25 அல்ட்ரா மாடல் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது.

அதன்படி கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் உக்ரைன் நாட்டு ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. தோட்டா ஒன்று ராணுவ வீரரை தாக்கிய நிலையில், அது அவர் வைத்திருந்த கேலக்ஸி S25 அல்ட்ரா மாடலின் மீது பாய்ந்தது. தோட்டா பாய்ந்ததில், ஸ்மார்ட்போன் சேதமுற்ற நிலையில், ராணுவ வீரருக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை.

ஸ்மார்ட்போனின் கிளாஸ் ஸ்கிரீன் உடைந்து போக, அதன் பிறகு இருந்த டைட்டானியம் சேசிஸ் தோட்டாவை தடுத்து நிறுத்தியுள்ளது. இதுவே ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த ராணுவ வீரர் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததோடு, தனது ஸ்மார்ட்போனின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

வாங்கி மூன்று வாரங்களே ஆன நிலையில், ஸ்மார்ட்போன் தோட்டாவை தடுத்து நிறுத்தி உயிரை காப்பாற்றிய நிலையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழந்து போனது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாம்சங் தரப்பு அதிகாரி ஒருவர் ராணுவ வீரரின் ஸ்மார்ட்போனினை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் டைட்டானியம் சேசிஸ் மற்றும் கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 கிளாஸ் கொண்டுள்ளது. முன்னதாக 2023-ம் ஆண்டும் இதே போன்ற சம்பவத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் ஒன்று உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1,29,999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1,65,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment