பணம் சம்பாதிக்கும் போதே அதை சேர்க்கும் பழக்கம் சிறந்தது என பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனாலும், பலர் பணம் சேமிக்கும் முறையை சரியாகவோ அல்லது வெளிப்படையாகவோ பேசுவதில்லை. அரசாங்கம் சார்பிலும் பொது மக்கள் பணம் சேமிக்க தூண்டும் வகையில் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என பணம் சேமிக்கவும், பணத்தை முதலீடு செய்து அதனை அதிகப்படுத்துவும் பெரிதும் உதவியாக செயல்படுகின்றன.
அதிக கவனமுடனும், முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு இதில் களமிறங்குவது தான் நல்லது. பணம் சேமிக்க பல்வேறு வழிமுறைகள் உண்டு என்பதை போல், அதில் இருந்து வருவாய் பெறவும் அதிக வழிமுறைகள் உள்ளன. இதற்காகவே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்கள் ஏராளமான திட்டங்களை வழங்கி வருகின்றன.
அப்படியாக பொது மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திட்டங்களில் ஒன்றுதான் முறையான முதலீட்டு திட்டம் (SIP). இந்த திட்டம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் எளிமையான வழிமுறை ஆகும். கடந்த சில ஆண்டுகளில் SIP திட்டத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இளைய தலைமுறையினர் மத்தியில் SIP முதலீடு மிகவும் பிரபலமாகவும் உள்ளது.
மிக சிறிய முதலீட்டில் தொடங்க முடியும் என்பதே SIP திட்டத்தின் சிறப்பான அம்சம் ஆகும். இதுதவிர வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் SIP திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒருவரின் நிதி நிலைமைக்கு ஏற்றவாரு இதில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டு தொகையை மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான முதலீட்டு தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்திற்கு பிறகு மக்கள் எதிர்காலம் பற்றி அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். இதன் காரணமாக பலரும் ஓய்வு காலம் பற்றிய திட்டமிடல்களை மிகவும் இளமை காலத்திலேயே தொடங்கி விடுகின்றனர். SIP திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1 கோடி வரையிலான நிதியை கூட உருவாக்க முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
1 கோடி ரூபாய்க்கான மாதாந்திர முதலீடு ரூ. 1000
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அல்லது 480 மாதங்கள் வரை முதலீடு செய்ய வேண்டும்
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 12 சதவீதம் ஆகும்
இந்த கணக்கில் முதலீடு செய்யும் போது ஒருவர் மொத்தமாக ரூ. 4.80 லட்சம் முதலீடு செய்வர்
இதில் மதிப்பிடப்பட்ட வருவாய் மட்டும் ரூ. 1,14,02,420
முதிர்வு காலத்தில் கிடைக்கக்கூடிய மொத்த தொகை ரூ. 1,18,82,420
இந்த கணக்கீட்டின் படி ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 தொகையை சரியாக 40 ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சேமிப்பை உருவாக்க முடியும்.