இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் விவகாரத்தில் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்படாதது பற்றி பலவிதமான தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கு விருப்பப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முன்னிலையில் இருந்தார். எனினும், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவானது. ரோகித் சர்மாவுக்கு முன்பு இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இரு மூத்த வீரர்களின் ஓய்வு அறிவிப்புக்கு பின் அணியை அடுத்து வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். எனினும், இந்த பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படாததற்கு இதுதான் காரணம் என்று ஒவ்வொருத்தரும் தனித்தனி விஷயங்களை முன்வைத்து பேசி வந்தனர்.
இந்த நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்காக முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் எடுத்த நேர்காணலில் ஜஸ்பிரித் பும்ரா பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் டெஸ்ட் கேப்டன்சி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றியும் விளக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜஸ்பிரித் பும்ரா, “ஐபிஎல் தொடரின் போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது ஓய்வை அறிவிக்கும் முன்பே நான் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து பிசிசிஐ-இடம் பேசினேன். எனக்கு ஆதரவளித்தவர்களிடம் நான் பேசினேன். இதேபோல் நான் எனது மருத்துவரிடமும் பேசியிருந்தேன்.”
“இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த விவகாரத்தில் புத்திசாலித்தனமான முடிவை எடுக்கவேண்டும் என்ற நினைத்தேன். இதனால் நானே பிசிசிஐ-ஐ தொடர்பு கொண்டு எனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் என்னால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக பங்கேற்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறினேன்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆம் பிசிசிஐ என்னை கேப்டனாக அறிவிக்க பரிசீலனை செய்தது. எனினும், நான் அந்த பொறுப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்தேன். எனது நிலை அணிக்கும் சரியானதாக இருக்காது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளை ஒருவரும், இரண்டு போட்டிகளை வேறு ஒருவரும் அணியை வழிநடத்துவது சரியாக இருக்காது. அது அணிக்கும் நல்லதல்ல. இந்த விஷயத்தில் அணி தான் முக்கியம் என்று நினைத்தேன்,” என்றார்.