இனி சார்ஜ் இல்லைனு சொல்லவே மாட்டீங்க… சத்தமின்றி வேலைபார்த்த சாம்சங்… என்ன விஷயம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் சந்தையில் அசத்தலான டிஸ்ப்ளே மற்றும் தலைசிறந்த கேமரா வழங்குவதில் சாம்சங் எப்போதும் முன்னோடியாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும், பேட்டரி மற்றும் சார்ஜிங் விவகாரத்தில் சாம்சங் இதுவரை பெரிதாக கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. சார்ஜிங் விஷயத்தில் இனியும் மௌனம் காக்க முடியாது என்பதை உணர்ந்ததாக சாம்சங் புது வேலையை பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சாம்சங் நிறுவனம் இருவித பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்தில் எந்த குறையும் வைக்காமல் நீண்ட நேர பேக்கப் வழங்கும் நோக்கில் இதற்கான வேலையை சாம்சங் ரகசியமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நம்பத்தகுந்த டிப்ஸ்டரான பான்டா பிளாஷ் ப்ரோ வெளியிட்டுள்ளார்.

பலவகை பேட்டரி தீர்வுகளை வழங்கும் வகையில் சாம்சங் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இவை நீண்ட நேர பேக்கப் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இருக்கும். போட்டி நிறுவனங்களான ஒப்போ, விவோ, ஹானர் மற்றும் சியோமி உள்ளிட்டவை ஏற்கனவே சிலிகான் கார்பன் பேட்டரிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இந்த வகை பேட்டரிகள் மிக மெல்லிய அளவில் அதிக திறன் கொண்டிருக்கும்.

மிக மெல்லிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென மெல்லிய மற்றும் அதிக திறன் கொண்ட பேட்டரி செல்களை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு சிலிகான் கார்பன் வகை பேட்டரிகள் தான் தற்போதைய தீர்வாக இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி S25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் இத்தகைய பேட்டரி முதலில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், சிலிகான் வகை பேட்டரிகள் காலப்போக்கில் வீங்கும் தன்மை கொண்டுள்ளன. இவ்வாறன சூழ்நிலைகளில் பேட்டரியின் ஆயுள் கணிசமாக குறையும். ஏற்கனவே பேட்டரி விஷயத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 7 சீரிசில் பெரிய சிக்கலை சந்தித்தது. இதன் காரணமாக சாம்சங் இந்த முறை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று தெரிகிறது. புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதோடு, அவை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலும் சாம்சங் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய வகை பேட்டரி தொழில்நுட்பம் குறித்து சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும், சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை சாலிட்-ஸ்டேட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளை பயன்படுத்தலாமா என்றும் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய பேட்டரிகள் அதீத திறன் கொண்டிருக்காது என்ற போதிலும், இவை பாதுகாப்பு மற்றும் சீரான செல்திறன் வழங்குவதை உறுதிப்படுத்தும் என்று தெரிகிறது.

Leave a Comment