ஹானர் நிறுவனம் தனது மேஜிக் V5 போல்டபில் ஸ்மார்ட்போனினை ஜூலை 5-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஷாங்காயில் நடைபெறும் 2025 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ஹானர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் லி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வெளியீட்டு தேதி மட்டுமின்றி இது ஹானர் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ சார்ந்த மடிக்கக்கூடிய சாதனமாக இருக்கும் என்றும் ஜேம்ஸ் லி தெரிவித்தார். இதுதவிர இந்த மாடல் உலகின் மிகமெல்லிய மற்றும் எடை குறைந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ஹானர் நிறுவனம் தனது மேஜிக் V3 ஸ்மார்ட்போனினை திறந்த நிலையில் 4.35mm அளவிலும், மடிக்கப்பட்ட நிலையில் 9.2mm ஆகவும் உருவாக்கி இருந்தது. புதிய ஹானர் மேஜிக் V5 மாடல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 7 ஸ்மார்ட்போனிற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனினை ஜூலை மாத துவக்கத்தில் தான் அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் மேஜிக் V5 மாடலில் தலைசிறந்த ஆன்-டிவைஸ் ஏஐ வசதிகள் வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.95 இன்ச் 2K+LTPO மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமராவுடன் இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது.
இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்றாம் தலைமுறை சிலிகான் கார்பன் தொழில்நுட்பத்தில் உருவானத 6100mAh பேட்டரி மற்றும் 66 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது சீன வெளியீட்டு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது மர்மமாகவே உள்ளது.