பொது மக்கள் பயன்பாட்டிற்காக வங்கிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன் அட்டை தான் கிரெடிட் கார்டு. நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் கிரெடிட் கார்டு பலருக்கு பயனுள்ளதாகவும், அவசர தேவைக்கு பண பிரச்சினையை தீர்க்கும் ஒன்றாகவும் இருக்கிறது. இத்தகைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த நுகர்வோர் தன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொருத்தர் பயன்பாடு மற்றும் வங்கி சார்ந்த இந்த கட்டணம் வேறுப்படும்.
மேலும் வங்கிகளும் கிரெடிட் கார்டு சார்ந்த கட்டணங்களை அவ்வப்போது மாற்றுவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில், எச்டிஎப்சி வங்கி தனது கிரெடிட் கார்டு கட்டணங்களை வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றியமைக்க இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன. இதனால் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது குறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பின் படி ஜூலை 1-ம் தேதி முதல் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதில் பரிவர்த்தனை கட்டணங்கள், வெகுமதி சலுகைகள் என பலவற்றில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றங்கள் ஆன்லைன் கேமிங், வாலட் ரீசார்ஜ் மற்றும் பயன்பாட்டு பில் கட்டணங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிரீம் 11, எம்பிஎல், ரம்மி கல்ச்சர் போன்ற தளங்களில் மாதம் ரூ. 10,000-க்கும் அதிக தொகையை செலவிட்டால் அதற்காக 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான வரம்பு மாதம் ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகளும் வழங்கப்படாது.
கிரெடிட் கார்டு பயன்படுத்தி பேடிஎம், மொபிகுயிக், ஃப்ரீசார்ஜ், ஓலா மணி போன்ற வாலட்களில் ரூ. 10,000-க்கும் அதிகமான தொகையை ஏற்றும் போது 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதிலும் அதிகபட்ச வரம்பு ரூ. 4,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ. 50,000-க்கும் அதிகமாக செலவழித்தால் பயன்பாட்டு பில்களுக்கும் 1 சதவீதம் கட்டணம் பொருந்தும். இதில் அதிகபட்ச கட்டணம் ரூ. 4,999 ஆகும்.
வாடகை கட்டணம் 1 சதவீதம் என்றும் இதற்கான உச்ச வரம்பு ரூ. 4,999 ஆகும். எரிபொருள் பரிவர்த்தனை கட்டணங்கள் ரூ. 15,000 அல்லது ரூ. 30,000 வரை இருந்தால் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் அதிகபட்ச கட்டணம் ரூ. 4,999 ஆகும். பேடிஎம், போன்பெ என மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பணம் செலுத்தினால் கல்வி கட்டணம் 1 சதவீதம் வசூலிக்கப்படும். ஆனாலும், பள்ளி, கல்லூரி வலைதளம் அல்லது POS இயந்திரம் மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் இல்லை.