வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வங்கி சார்ந்த சேவைகளை வழங்கி வருகின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வழக்கமும் அமலில் இருந்து வருகிறது. இதேபோல் வங்கி விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையிலும் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன.
இவைதவிர வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் சில சேவைகளுக்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் நிர்ணயிக்கப்பட்ட சராசரி மாதாந்திர இருப்பு இல்லையெனில் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வரிசையில் தனியார் வங்கியான DBS அதன் வாடிக்கையாளர்கள் சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்கவில்லை எனில் 6 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் போதுமான இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் இந்த அபராத தொகை விதிக்கப்படுகிறது. அதன்படி DBS வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 10,000 தொகையை வைத்திருப்பது அவசியம் ஆகியிருக்கிறது. வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை ரூ. 10,000-க்கும் கீழ் குறைந்தால் 6 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூரை சேர்ந்த DBS வங்கியின் துணை நிறுவனமாக DBS வங்கி இந்தியா இருக்கிறது.
சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை எனில் DBS வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து 6 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 500 அபராதம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக DBS வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பியுள்ளது. சராசரி மாதாந்திர இருப்புத் தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று DBS வங்கி தெரிவித்துள்ளது.
DBS வங்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஏற்றவாறு பலவகை வரம்புகளை கொண்டுள்ளது. அதன்படி DBS வங்கி SB Others கணக்கிற்கு சராசரி மாதாந்திர இருப்புத் தொகையாக ரூ. 1000, Growth One சேமிப்புக் கணக்கிற்கு ரூ. 5,000, Savings Account ரூ. 10,000, Growth One Savings Account ரூ. 10,000, Lakshmi Savings Youth Power Account ரூ. 100 மற்றும் TAS Savings Youth Power ரூ. 10,000 என இருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்துள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை வங்கிக் கணக்குகளுக்கும் சராசரி மாதாந்திர இருப்புத் தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் 6 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். DBS வங்கியின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.