பொது மக்களிடையே முதலீடு மற்றும் சேமிப்பு பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் தொடங்கி தொழில்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் முதலீடு அல்லது சேமிப்பு திட்டங்களில் பணத்தை செலுத்த துவங்கியுள்ளனர். இதில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி (SIP) முறையில் முதலீடு செய்வோர் அதிகரித்துள்ளனர். சிஸ்டமடிக் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் என்பதன் சுருக்கம் தான் எஸ்ஐபி.
குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்வது தான் எஸ்ஐபி என்று அழைக்கப்படுகிறது. இதில் முதலீட்டு தொகையை மாதாந்திர அடிப்படையிலோ, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என முதலீட்டாளர் விருப்பம் போல் செலுத்து்ம வசதி வழங்கப்படுகிறது. எஸ்ஐபி முதலீடுகள் பொதுவாக மிகச் சிறிய தொகையில் இருந்தே தொடங்குகிறது.
இதன் காரணமாக எஸ்ஐபி திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ. 100-இல் இருந்து கூட முதலீடு செய்யலாம். மிகக் குறைந்த தொகையை கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் இந்த திட்டம் இந்தியாவில் அதிக பிரபலமாக இருக்கிறது. எஸ்ஐபி திட்டத்தில் மாதம் ரூ. 10,000 முதலீடு செய்யும் போது ரூ. 1 கோடி பெறுவதற்கு எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
எஸ்ஐபி திட்டத்தில் மாதம் ரூ. 10,000 முதலீடு செய்தால் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு முதலீடு செய்யும் போது 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில் 10-ம் ஆண்டு இறுதியில் மொத்தமாக ரூ. 12 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதில் உங்களுக்கு ரூ. 10.40 லட்சம் லாபம் கிடைக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகள் முடிவில் உங்களது கணக்கில் ரூ. 22.40 லட்சம் இருக்கும்.
இதேபோல் 20 ஆண்டுகள் மாதம் தொடர்ச்சியாக ரூ. 10,000 முதலீடு செய்தால் எஸ்ஐபி-இல் மொத்தம் ரூ. 24 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதில் கிடைக்கும் லாபம் ரூ. 67.98 லட்சம் என்று வைத்துக் கொண்டால் மொத்தம் ரூ. 91.98 லட்சம் கணக்கில் சேர்ந்திருக்கும். எஸ்ஐபி-யில் ரூ. 1 கோடி பெறுவதற்கு 21 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாதம் ரூ. 10,000 செலுத்த வேண்டும்.
இப்படி முதலீடு செய்யும் போது 21 ஆண்டுகள் முடிவில் ரூ. 25.20 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு ரூ. 79.10 லட்சம் லாபம் கிடைக்கும் பட்சத்தில் உங்களது கணக்கில் ரூ. 1.04 கோடி இருக்கும்.