வங்கி நேரம் அல்லாத சமயங்களிலும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் போன்ற வசதிகளை பயனர்களுக்கு நேரடியாகவும், இயந்திரம் மூலம் வழங்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் ஏடிஎம். எந்நேரமும் காசு எடுக்கலாம் என்ற அர்த்தத்துடன் இந்த இயந்திரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் துறையில் பிரபலமான ஆக்சிஸ் வங்கி புதிதாக ஏடிஎம் விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் சேவையை பயன்படுத்த முன்பு இருந்ததை விட அதிக தொகையை செலுத்த வைக்கும் நோக்கில் உள்ளன. இந்த விதிமுறைகள் இன்று (ஜுலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை ஆக்சிஸ் வங்கி உயர்த்தி இருக்கிறது. இது ஆக்சிஸ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஏடிஎம்களுக்கும் பொருந்தும்.
இன்று தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனை வரம்பை மீறும் வணிக பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படும். ஏற்கனவே இந்த கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 21 என இருந்தது. இன்று முதல் இதற்கான கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 23 என உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு சேமிப்பு கணக்கு, என்ஆர்ஐ கணக்கு, டிரஸ்ட் கணக்கு மற்றும் முன்னுரிமை வகை வாடிக்கையாளர்கள் உள்பட அதிக எண்ணிக்கையில் கணக்கு வைத்திருப்பவர்களை பாதிக்கும். எனினும், வரம்பற்ற பரிவர்த்தனைகள் செய்வதற்கான வசதியை ஏற்கனவே வைத்திருக்கும் கணக்குகளில் இந்த மாற்றத்தின் தாக்கம் குறைவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நிர்வாக செலவுகள் அதிகரித்து வருவது, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் பணம் கையாளுதல் கட்டணங்கள் காரணமாக பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வங்கிகள் ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ரிசர்வ் வங்கியும் அனுமதி அளித்துள்ளது.
ஏடிஎம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதை அடுத்து, மக்கள் முடிந்தவரை ஏடிஎம் பரிவர்த்தனைகளை தவிர்க்க முயற்சிகளில் ஈடுபடலாம். மிக அவசிய தேவைகளுக்கு மட்டும் ஏடிஎம் பயன்படுத்தலாம். இதற்கு மாற்றாக டிஜிட்டல் ஆப்ஷன்களை பயன்படுத்த தொடங்கலாம்.