நத்திங் நிறுவனம் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்- நத்திங் போன் 3 உடன் தனது முதல் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஹெட்போன் 1 என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் மாடல் நேரடியாக பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய ஹெட்போனில் ஹைப்ரிட் ANC, LDAC 40mm டைனமிக் டிரைவர், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் 360 டிகிரி சவுண்ட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹெட்போன் உருவாக்க நத்திங் நிறுவனம் KEF உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால், புதிய சாதனம் பயனர்களுக்கு தலைசிறந்த அனுபவம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் ஹெட்போன் 1 மாடலில் அந்நிறுவனத்திற்கே உரிய டிரான்ஸ்பேரண்ட் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்போனில் அலுமினியம் பிரெசிஷன் CNC பாகங்கள், PU ரக மெமரி ஃபோம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சவுகரியமான அனுபவம் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இதில் உள்ள இயர்கப் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இது உறுதியாக இருக்கும். ஹெட்போன் 1 மாடலில் வழக்கமா டச் கண்ட்ரோல்களுக்கு மாற்றாக டாக்டைல் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ரோலர், பேடிள் மற்றும் பட்டன் ஆகியவை வால்யூம் அட்ஜஸ்ட்மென்ட், மீடியாவை மாற்றுவது, ANC மோட்களிடையே மாற்றுவது உள்ளிட்டவைகளை மிகத்துல்லியமாக செய்ய அனுமதிக்கின்றன.
ஹெட்போன் 1 மாடலில் உள்ள புதிய பட்டன் கொண்டு நத்திங் எக்ஸ் ஆப்-இல் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்த பிறகு பயனர்கள் ஒற்றை க்ளிக் மூலம் சேனல் ஹாப் அம்சத்தை இயக்க முடியும். இது ரீசன்ட் ஆடியோ ஆப்ஸ் மற்றும் அதிகம் விரும்பிய அம்சங்களை இயக்க வழி செய்யும். பயனர்கள் இதை கொண்டு வாய்ஸ் கமாண்ட், நியூஸ் ரிப்போர்ட்டர் அல்லது எசென்ஷியல் ஸ்பேஸ் உள்ளிட்டவைகளை இயக்கும் வகையிலும் மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த மாடலில் 8-பேண்ட் மேம்பட்ட EQ வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இரட்டை feedforward மற்றும் feedback மைக்ரோபோன்கள் ரியல்டைம் ANC வழங்குகின்றன. இத்துடன் 4-மைக் ENC சிஸ்டம் உள்ளது. இது ஏஐ மூலம் இயங்கும் அம்சம் ஆகும்.
நத்திங் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் 1 மாடல் ANC இயக்கப்பட்ட நிலையில் 35 மணி நேரத்திற்கு பேக்கப், ANC இயக்கப்படாத நிலையில் 80 மணி நேரம் வரை பேக்கப் வழங்குகிறது. இத்துடன் ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ANC இயக்கப்பட்டாலும் 2.4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்த மாடலில் ப்ளூடூத் 5.3, Fast Pair, லோ-லேடன்சி மற்றும் டூயல் டிவைஸ் கனெக்ஷன் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்திய சந்தையில் புதிய நத்திங் ஹெட்போன் 1 விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த மாடல் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் இந்த ஹெட்போன் வாங்குவோருக்கு 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது, இதன் விற்பனை ஜூலை 15-ம் தேதி தொடங்குகிறது.