Jio AI Classroom: ஜியோ நிறுவனம் இந்திய பயனாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த விஷயங்களைச் சொல்லித் தருவதற்கென்றே பிரத்யேகமாக AI Classroom வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Jio AI Classroom
இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2025 மாநாட்டின் முதல்நாளில் ஜியோ நிறுவனம் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைவரும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை புரிதல் கொண்டு இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இதை அறிமுகப்படுத்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறது ஜியோ.
ஜியோ பிசி மற்றும் ஜியோ இன்ஸ்டிடியூட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் Jio AI Classroom வசதியின் மூலம் பயனாளர்கள், செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆரம்ப மற்றும் அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் இருக்கும் பயனாளர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றிய சரியான மற்றும் தேவையான திறன்களை அறிந்து கொள்வதோடு அவற்றை வளர்த்துக் கொள்வது அவசியம். அதை Jio AI Classroom மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜியோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
மாணவர்கள், தங்கள் படிப்புக்குத் தேவையான பாடங்களை ஏஐ உதவியோடு ஒழுங்குபடுத்துவது, புதிய டிசைன்களை உருவாக்குவது மற்றும் ஏஐ உதவி கொண்டு அன்றாட வாழ்வின் பல்வேறு சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்டவற்றை Jio AI Classroom உதவியோடு செய்துகொள்ள முடியும் என்றும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Jio AI Classroom-ல் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Jio AI Classroom நான்கு வார கோர்ஸாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தினசரி ஒரு மணி நேர ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஏஐ பற்றிய அடிப்படை விஷயங்களை இதில் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல், இந்த கோர்ஸில் இணைபவர்களுக்கு ஜெமினி, சாட்ஜிபிடி, அடோப் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஏஐ டூல்ஸும் அளிக்கப்படும்.
இந்த கோர்ஸின் ஒரு பகுதியாக பல்வேறு புராஜக்டுகளை உருவாக்கவும் டாஸ்க் கொடுக்கப்படும். ஏஐ டூல்ஸைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். இன்டர்நெட் வசதி கொண்ட கணினிகள், லேப்டாப்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இலவசமாக Jio AI Classroom வசதி கிடைக்கும்.
கோர்ஸை முடிப்பவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல், ஜியோ பிசி மூலம் இந்த கோர்ஸை முடிப்பவர்களுக்குப் பிரத்யேகமாக ஜியோ இன்ஸ்டிடியூட் வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.