Gmail vs Zoho Mail: உங்கள் அக்கவுண்டை மாற்றினால் என்ன நடக்கும்.. எப்படி மாற்றுவது?

இந்தியாவின் சொந்த தயாரிப்பான அரட்டை செயலிக்கான பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜோஹோ மெயிலுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

Gmail vs Zoho Mail

கூகுளின் பிரீமியம் சேவையான ஜிமெயிலை உலகின் பல கோடிக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த மற்றும் அலுவலக பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த டெக் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம், அதற்கு மாற்றாக ஜோஹோ மெயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மெட்டாவின் வாட்ஸப்புக்கு இணையாக இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் அரட்டை செயலிக்கான பயனாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், ஜோஹோ மெயிலுக்கான வரவேற்பும் மெதுவாக அதிகரித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் தங்களின் கணக்குகளை ஜோஹோ மெயிலுக்கு மாற்றியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோஹோ மெயிலுக்கு உங்கள் கணக்கை மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும்?

Gmail கணக்கிலிருந்து Zoho Mail-க்கு எப்படி மாறுவது?

ஜோஹோ மெயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.zoho.com/mail/ மூலம் நீங்கள், உங்கள் கணக்கைப் புதிதாகத் தொடங்கலாம். உங்கள் தேவைக்கேற்ப இலவச கணக்கு அல்லது பிரீமியம் சேவையைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கில் இருக்கும் மெயில் மற்றும் மெசேஜ்கள் உள்ளிட்ட தகவல்களையும் பாதுகாப்பாக ஜோஹோ மெயிலுக்கு மாற்றிக் கொள்ள இயலும். இதற்கு நீங்கள், உங்களுடைய ஜிமெயில் கணக்கின் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று IMAP வசதியை ஆன் செய்ய வேண்டும்.

இதன்மூலம், ஜோஹோ மெயிலுக்கு உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைய அனுமதி அளித்து உங்கள், மெயில், மெசேஜ் உள்ளிட்ட தகவல்களைப் பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள முடியும். ஜோஹோ மெயிலின் Migration Wizard வசதியைப் பயன்படுத்தி, ஜிமெயில் தரவுகளை ஒரே கிளிக்கில் மொத்தமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

உங்கள் ஜோஹோ மெயிலை ஆக்டிவேட் செய்தவுடன், ஜிமெயில் ஆட்டோமெட்டிக் ஃபார்வேர்டு வசதியை ஆன் செய்யவும். இதன்மூலம் உங்கள் ஜிமெயில் கணக்குக்கு வரும் மெயில், மெசேஜ்கள் அனைத்தும் உங்கள் ஜோஹோ மெயிலுக்கு வந்து சேரும்.

இதன்பின், உங்கள் புதிய மெயில் ஐடி குறித்த தகவலை உங்களின் நட்பு வட்டம், வியாபாரரீதியான தொடர்புகளுக்கு அனுப்பவும். அதேபோல், உங்கள் சமூக வலைதளங்களில் இந்த அப்டேட் குறித்த தகவலையும் பரிமாறிக் கொள்ளலாம்.

நீண்டநாட்களாக ஜிமெயில் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த டிரான்ஃஸ்பர் சமயத்தில் உங்களுக்கு அதிக நேரம் எடுக்கலாம், குறைந்தபட்ச அளவு டேட்டாவை இழக்க நேரிடுவது, அதேபோல், சில மெயில்கள், மெசேஜ்கள் சரியாக பரிமாறப்படாதது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இதையெல்லாம் மனதில் கொண்டு உங்கள் கணக்கை மாற்றுவதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

Leave a Comment