ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட ஆன்லைன் மீட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி மீட்டிங்குகளை நடத்தும்போது, அவற்றை பதிவு செய்யும் செயலிகள் அந்த தகவல்களைத் தங்களின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளப் பயன்படுத்தலாம் என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் மீட்டிங்குகள்
இன்றைய சூழலில் பெரு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரையில், தங்கள் நிறுவனத்தின் மீட்டிங்குகளை ஆன்லைன் மீட்டிங் செயலிகளான ஜூம், கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்டவைகள் உதவியோடே நடத்துகின்றன.
இந்த மீட்டிங்குகளில் பேசப்படும் முக்கியமான விஷயங்களை எதிர்காலத்தில் தேவைப்பட்டால், பயன்படுத்தும் நோக்கில் பெரும்பாலும் பதிவு செய்து வைத்துக்கொள்வதுண்டு. அப்படி இந்தவகை மீட்டிங்குகளை ரெக்கார்ட் செய்ய ஏகப்பட்ட ஏஐ செயலிகள் இருக்கின்றன.
ஒரே ஒரு கிளிக் மூலம் உங்கள் மீட்டிங் முழுவதையும் வீடியோ, ஆடியோவாகப் பதிவு செய்துகொள்ள முடியும். அப்படி ரெக்கார்ட் செய்ய பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படியான ரெக்கார்டிங் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு செயலிதான் otter.ai. கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 100 கோடிக்கும் அதிகமான மீட்டிங்குகள் இதன்மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தநிலையில், otter.ai நிறுவனத்தின் மற்றொரு செயலியான otter notebook செயலியின் டிரான்ஸ்கிரிப்ஷன் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த மாதிரியான மீட்டிங் ரெக்கார்டிங் வீடியோக்களை பயனாளர்கள் அனுமதியின்றியே அந்த நிறுவனம் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. otter.ai-யைப் பயன்படுத்தி மீட்டிங்குகளை ஹோஸ்ட் செய்பவர் அதை ரெக்கார்ட் செய்கையில், அதில் பங்கேற்பவர்கள் மற்றும் ஹோஸ்ட் ஆகியோரின் அனுமதியின்றியே அந்த ரெக்கார்டிங்குகளைத் தங்கள் பொருளாதார ஆதாயத்துக்கான இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது.
இது அந்த செயலியைப் பயன்படுத்துவர்களின் தனியுரிமையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பயனாளர்களின் முறையான அனுமதியுடனேயே இந்த தகவல்களைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.