Finternet: உங்க சொத்தை சீக்கிரமே ஷேர்ஸ் மாதிரி வித்துக்கலாம்… இந்த ஐடியா எப்படியிருக்கு?

யுபிஐ அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நீல்கனி, இப்போது Finternet என்ற பெயரில் புதிய ஐடியா ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறார். 

Finternet என்றால் என்ன?

2023-ம் ஆண்டு உலக அளவில் வணிகத் துறையில் நிபுணர்களான அகஸ்டின் கார்ஸன்ஸ், சித்தார்த் ஷெட்டி மற்றும் பிரமோத் வர்மா ஆகியவர்களோடு இணைந்து Finternet என்கிற திட்டத்தை நந்தன் நீல்கனி வடிவமைத்தார். 

இதன் அடிப்படையே, எப்படி யுபிஐ மூலம் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளில் இருந்தும் இன்னொரு கணக்குக்கு எளிதாகப் பணம் அனுப்ப முடியுமோ, அதேபோல சொத்துகள், பணம் ஆகியவற்றை உலக அளவில் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். 

இந்தத் திட்டம் முதற்கட்டமாக எட்டு துறைகளில் 30 நிறுவனங்களின் பங்களிப்போடு உலகின் நான்கு கண்டங்களில் சோதனையில் இருக்கிறது. சோதனைகள் முடிந்த பிறகு 2026-ம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. 

சமீபத்தில் நடந்த குளோபல் பின்டெக் பெஸ்ட் 2025 நிகழ்வில் இதுகுறித்து பேசிய நந்தன் நீல்கனி, `பாரம்பரிய வங்கித் துறை நடவடிக்கைகளை டிஜிட்டலின் புதுமை புரட்சியோடு இணைக்கும் பாலமாக Finternet இருக்கும். யுபிஐ-யின் அடிப்படை நோக்கம் உலக அளவுக்கு எடுத்துச் செல்லப்படுவது போன்ற யோசனை தான் இது. ஏற்கனவே சிங்கப்பூர், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ மற்றும் சுவிட்சர்லாந்தில் இதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். 

திட்டத்தின் வளர்ச்சியை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. விரைவில் இது உலக அளவில் அறிமுகமாகும்’’ என்றார். Finternet மூலம் உங்கள் வீடு, நிலம் போன்ற சொத்துகளையோ, பணத்தையோ டோக்கன்களாக மாற்றிக் கொள்ள முடியும். அந்த டோக்கன்களை பங்குச் சந்தையில் பங்குகளை விற்பது போல, மிகவும் எளிதாக விற்கவோ அல்லது கைமாற்றிக் கொள்ளவோ முடியும்.

 சொத்துகளை மட்டுமல்ல, உங்களின் தங்கம், முதலீட்டு பத்திரங்கள் போன்றவற்றை டோக்கன்களாக மாற்றி வைத்துக் கொண்டால், அதை பாதுகாப்பாக விற்றுக்கொள்ள முடியும். இது பத்திரப்பதிவு போன்ற தாமதங்களைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment