பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய பிரவுசரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ChatGPT Atlas
தற்போது ஆப்பிளின் மேக் ஓஎஸ் வசதி கொண்டோருக்கு மட்டுமே சாட்ஜிபிடியின் அட்லஸ் பிரவுஸரை இயக்க முடியும். விரைவில், விண்டோஸ் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள பயன்பாட்டாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் இந்த பிரவுஸர் டெக் உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கும் என்று கணித்து வருகிறார்கள். சாட்ஜிபிடி, கூகுள் குரோமுக்குப் போட்டியாக பிரவுஸர் ஒன்றை உருவாக்கி வருவதாகக் கடந்த ஜூலை மாதத்திலேயே தகவல்கள் கசிந்தன. ஆனால், அதுபற்றி சாட்ஜிபிடி தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், ஆப்பிள் மேக் ஓஎஸ்-ஸுக்கான அட்லஸ் பிரவுஸர் அறிமுகமாகியிருக்கிறது. அட்லஸ் அறிமுகம் குறித்து பேசிய சாட்ஜிபிடி தலைமை செயலதிகரி சாம் அல்ட்மேன், `மக்கள், வழக்கமாக பிரவுஸரில் யுஆர்எல்-களை டைப் செய்வதோடு மட்டுமல்லாமல், அட்லஸைப் பயன்படுத்தி பிரவுஸரோடு சாட் செய்ய முடியும். அவர்களுக்குத் தேவையான தகவல்களை பிரவுஸரிடமே கேள்விகளாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.
பிரவுஸரைப் பொறுத்தவரை புதிய டேப்களை ஓபன் செய்வதை விட, அதில் சிறப்பானதொரு முன்னேற்றம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அட்லஸ் இந்த நிலையை மாற்றும். நேரடியாக பிரவுஸருடனேயே மக்கள் இண்ட்ராக்ட் செய்ய முடியும்’’ என்றார்.
இது ஏற்கனவே களத்தில் இருக்கும் கூகுள் குரோம், ஆப்பிள் சஃபாரி இதோடு இன்னும் பல பிரவுஸர்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்கும். சாட்ஜிபிடியோடு ஏஜெண்ட் மோட் என பல வசதிகளையும் இந்த அட்லஸ் கொண்டிருக்கிறது.