6 கோடி தமிழர்களின் வாக்குரிமை பறிபோகும்!.. மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரதம்!

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக வந்துள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு இங்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான மன்சூர் அலிகான், சென்னையில் இன்று (டிசம்பர் 3, 2025) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், தனது போராட்டத்தின் தீவிரத்தை விளக்கினார். “தமிழ்நாட்டிற்காக 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கால் தூசிக்குக்கூட எனது இந்தப் போராட்டம் ஈடாகாது. இருப்பினும், இந்த உரிமைக்கான போராட்டம் தமிழ்நாடு முழுக்கப் பரவ வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்ற ஒரு வெகுஜன மக்கள் போராட்டம் தமிழகத்தில் எழ வேண்டும். அப்படி மக்கள் போராடினால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசிய மன்சூர் அலிகான், “திருடன் மேலே உட்கார்ந்து நம்மை ஆட்சி செய்கிறான். இதை நான் சொல்லவில்லை, அண்ணன் ராதாரவி சொல்லி இருக்கிறார். ‘இரண்டு அக்யூஸ்டு நம்மளை ஆட்சி செய்கிறார்கள்.’ அவர்கள் சாதாரணமாகப் போக மாட்டார்கள்,” என்று ஆளும் வர்க்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். “பீகாரில் வாக்கு செலுத்தினால் இங்கு வந்து வாக்கு செலுத்துதல் என்று தேர்தல் ஆணையம் நம்பர் 1 அயோக்கியத்தனம் பண்ணுகிறது. இது உடனடியாகக் களையப்பட வேண்டும். இறந்தவர்களின் வாக்குகளைத் தூக்கி எறியுங்கள், ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரின் வாக்கு கூடப் பட்டியலில் இருந்து மிஸ் ஆகக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கக் கூடாது. அப்படி வழங்கினால், நான் நேரடியாகத் தேர்தல் ஆணையத்திடம் சென்று போராட்டம் செய்வேன்,” என்று மன்சூர் அலிகான் எச்சரித்துள்ளார். அவர் தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment