ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 5, 2025 அன்று இந்தியா வருகை தந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், இந்தியாவுடனான உறவு மற்றும் உலக அமைதி குறித்துப் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அமைதியான நிலைப்பாடு குறித்துப் பேசிய அதிபர் புதின், “மோடியின் அமைதியில்தான் நாடுகளின் நலன் அடங்கியிருக்கிறது. நாங்கள் (இந்தியா-ரஷ்யா) ஒன்றாக உலகை அமைதிப் பாதையை நோக்கி வழிநடத்துவோம்,” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா எப்போதும் தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகம் குறித்து புதின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
“எந்தவித இடையூறும் இல்லாமல் இந்தியாவிற்குத் தொடர்ச்சியாகக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யத் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் உறுதிப்படுத்தினார்.
உலகின் முன்னணி எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக ரஷ்யா இருப்பதால், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குத் தேவையான எரிசக்தி தேவைகளைத் தடையின்றி பூர்த்தி செய்ய ரஷ்யா தயாராக உள்ளது என்ற செய்தி, இந்தியாவிற்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்தியா-ரஷ்யா இடையேயான 23-வது உச்சி மாநாட்டிற்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது புதின் இந்த முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.