அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ‘கோல்டு கார்டு’ (Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கி வேலை பார்ப்பதற்கும், குடியுரிமை பெறுவதற்கும் பணக்கார வெளிநாட்டவர்களுக்குச் சலுகை அளிக்கிறது.
$1 மில்லியன் முதலீடு :
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘கோல்டு கார்டு’ விசா பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹8.3 கோடி) கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அமெரிக்காவில் முதலீடாகக் கருதப்படும்.
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
EB-5-க்கு மாற்றாக ‘கோல்டு கார்டு’ :
இந்த ‘கோல்டு கார்டு’ விசா, ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள EB-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு மாற்றாகவோ அல்லது அதன் மேம்பட்ட வடிவமாகவோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
EB-5 திட்டத்தில் முதலீட்டுத் தொகை (சுமார் $8 லட்சம்) மற்றும் 10 முழுநேர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிபந்தனைகள் இருந்தன. புதிய ‘கோல்டு கார்டு’ விசா, நிரந்தர குடியுரிமைக்கான செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் முதலீட்டை முதன்மை அளவுகோலாகக் கருதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆட்சிக்காலத்தில் H-1B மற்றும் F-1 போன்ற குடியேற்றமல்லாத விசாக்களைப் பெறுவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கினார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ‘கோல்டு கார்டு’ விசா, திறமையின் அடிப்படையில் இல்லாமல், பணத்தின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமையைத் தீர்மானிக்கும் என்ற விமர்சனத்தை உலகெங்கிலும் உள்ள குடியேற்ற வல்லுநர்கள் மற்றும் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அதிக கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கும் பணக்காரர்கள் மற்றும் அதிக முதலீட்டாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு ஈர்க்கும் நோக்கில் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.