இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதாகப் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரிவாபா ஜடேஜா, தனது கணவர் ரவீந்திர ஜடேஜாவுக்கு எந்தவொரு தவறான பழக்கமும் இல்லை என்றும், அவர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தனது கலாச்சார வேர்களை நினைவில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்வதாகவும் புகழாரம் சூட்டினார்.
“எனது கணவர் கிரிக்கெட் போட்டிகளுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அவர் எந்தத் தவறான பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை. ஏனென்றால், வாழ்க்கையில் முன்னேறியவுடன் நாம் நமது அடித்தளமாக இருப்பதும் நமது கலாச்சார வேர்களை நினைவில் கொள்வதும் மிகவும் முக்கியம். என் கணவர் அதனைப் பின்பற்றுகிறார்,” என்று ரிவாபா ஜடேஜா தெரிவித்தார்.
இதற்கு மாறாக, “இந்திய அணியில் உள்ள சில வீரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் தவறான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் தவறான நடத்தை குறித்து அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிந்தாலும் அவர்கள் அதற்கு எந்தத் தடையும் விதிப்பதில்லை,” என்றும் அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
சர்ச்சை ஏன்?
ரிவாபா ஜடேஜா எந்தவொரு வீரரின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆதாரம் இல்லாமல் இதுபோலப் பேச வேண்டாம் எனப் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் குறித்து பிசிசிஐ (BCCI) தரப்பில் சில வீரர்கள் எச்சரிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஐபிஎல் போட்டிகளின்போது நடக்கும் பார்ட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்வது, புகையிலை விளம்பரங்களில் நடிப்பது குறித்தும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.