50 மடங்கு வீரியம் கொண்ட Fentanyl போதைப்பொருள்.. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! ட்ரம்ப் ஆக்ரோஷம்!

அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், செயற்கை போதைப்பொருளான Fentanyl-ஐ ‘பேரழிவு ஆயுதம் (Weapon of Mass Destruction)’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

வெனிசுலா மீது குற்றச்சாட்டு :

அமெரிக்காவிற்குள் Fentanyl உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஊடுருவுவதற்குக் காரணமாக வெனிசுலாவை ட்ரம்ப் நிர்வாகம் நேரடியாகக் குற்றம்சாட்டி வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆதரவுடன் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களே இதற்குக் காரணம் என்றும், இது அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கரீபியன் கடலில் ராணுவ நடவடிக்கை :

இந்த தீவிரக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், ட்ரம்ப் நிர்வாகம் கரீபியன் கடல் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்குடன், அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கரீபியன் கடல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீப வாரங்களில், வெனிசுலாவை ஒட்டிய கடல் பகுதிகளில் போதைப்பொருள் ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் பல கப்பல்கள் மற்றும் அதிவேகப் படகுகள் அமெரிக்க கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை டிரம்ப், ‘போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Fentanyl-ன் அபாயகரமான வீரியம் : 

Fentanyl என்பது வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை ஓபியாய்டு போதைப்பொருள் ஆகும். இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது சாதாரணமாகப் புழங்கும் ஹெராயினை விட சுமார் 50 மடங்கு வீரியம் கொண்டது. மிகச்சிறிய அளவில் உட்கொண்டால் கூட, இது கடுமையான சுவாசப் பிரச்சனைகள், வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

அதிபர் ட்ரம்ப் Fentanyl-ஐ ஒரு ‘பேரழிவு ஆயுதம்’ என அறிவித்திருப்பதன் மூலம், அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஒரு உலகளாவிய இராணுவத் தலையீட்டைக் குறிப்பதாக உலக நாடுகள் மத்தியில் பரபரப்பும், கரீபியன் பகுதியில் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment