பெயரை மீட்க வேண்டாம்… நிதியை மீட்கப் பாருங்கள்!.. தமிழக அரசுக்கு கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிதிப் பகிர்வு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்துத் தனது மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறியீட்டு அரசியலை விடப் பொருளாதார எதார்த்தங்களே தற்போதைய முக்கியத் தேவை என்பதை வலியுறுத்தினார்.

பெயர் முக்கியமல்ல பயனே முக்கியம் :

மத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், “மகாத்மா காந்தியாரின் பெயரை யாராவது காக்கவோ அல்லது மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயருக்கு அப்பாற்பட்டவர். இப்போது நாம் கவலைப்பட வேண்டியது பெயர்களைப் பற்றி அல்ல, திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றித்தான்” என்று கூறினார்.

தமிழக அரசுக்குக் கூடும் நிதிச்சுமை :

தமிழக அரசின் நிதி நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த அவர், “மத்திய அரசின் இத்தகைய மாற்றங்களால் தமிழக அரசின் மீது கூடுதல் நிதிச்சுமை திணிக்கப்படுகிறது. இதனால் மாநில அரசு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. இதன் நேரடி பாதிப்பு ஏழை எளிய மக்களுக்கே சென்றடைகிறது” எனச் சுட்டிக்காட்டினார்.

ஏழைகளுக்கான நிதி குறைகிறது :

“ஏழைகளுக்குச் சென்றடைய வேண்டிய உதவித் தொகைகளும், மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியும் குறைந்து வருவதுதான் உண்மையான வேதனை. அதை மீட்டெடுக்கவும், ஏழை மக்களின் உரிமைகளைக் காக்கவும் தான் நாம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, பெயர்களை வைத்து வேறு களத்தில் அரசியல் விளையாடக் கூடாது. இதுவே என்னுடைய தாழ்மையான கருத்து.”

அரசியல் களத்தில் அதிர்வலைகள் :

திட்டங்களின் பெயர் மாற்றத்தை எதிர்த்துப் பல்வேறு கட்சிகள் போராடி வரும் நிலையில், கமல்ஹாசனின் இந்த ‘பொருளாதார ரீதியான அணுகுமுறை’ அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான அரசியலைத் தாண்டி, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிதிப் பற்றாக்குறையை அரசு கவனிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment