இந்தியாவில் இதையெல்லாம் நினைக்கக்கூட முடியாது!.. சிங்கப்பூர் பாதுகாப்பை கொண்டாடும் இந்தியப் பெண்!

“நள்ளிரவு 3 மணிக்குச் சாலையில் தனியாக நடந்து செல்கிறேன், ஆனால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. இது சொகுசு அல்ல, சிங்கப்பூரின் அடிப்படை நிஜம்” என இந்தியப் பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த கிருத்திகா ஜெயின்? சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண் கிருத்திகா ஜெயின். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அதிகாலை 3 மணி அளவில் ஆள் ஆரவமற்ற சிங்கப்பூர் வீதிகளில் அவர் தனியாக நடந்து செல்வதைக் காட்டியுள்ளார்.

வைரல் பதிவில் கிருத்திகா கூறியது என்ன?
“இப்போது நள்ளிரவு 3 மணி. நான் என் வீட்டிற்கு நிம்மதியாக நடந்து செல்கிறேன். என் மனதில் எந்தப் பயமும் இல்லை. யாராவது பின் தொடர்கிறார்களா என்று நான் ஒருமுறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. இது சிங்கப்பூரில் மிகவும் சாதாரணமான ஒன்று.

ஆனால், இதே நேரத்தில் இந்தியாவில் நான் தனியாக வெளியே செல்வதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. சிங்கப்பூரின் வானுயர்ந்த கட்டிடங்களோ அல்லது சுற்றுலாத் தலங்களோ என்னை ஈர்க்கவில்லை. இந்தப் பாதுகாப்பு உணர்வுதான் என்னைச் சிங்கப்பூரை நேசிக்க வைக்கிறது. இது வெறும் சொகுசு (Luxury) அல்ல, இதுதான் ஒரு நாட்டின் சாதாரணமான நிலையாக இருக்க வேண்டும்.”

சமூக வலைதளங்களில் விவாதம்:
கிருத்திகாவின் இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. “பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்றால் அது சிங்கப்பூர்தான்” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே சமயம், இந்தியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்தும், எப்போது இந்திய நகரங்கள் இது போன்ற பாதுகாப்பை எட்டும் என்பது குறித்தும் நெட்டிசன்கள் தங்களது கவலைகளையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். “பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை, அது சிங்கப்பூரில் சாத்தியமாகியுள்ளது” எனப் பல பெண்கள் கிருத்திகாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களும், நவீனக் கண்காணிப்பு முறைகளுமே அந்நாட்டைப் பெண்களுக்கான பாதுகாப்பான சொர்க்கமாக மாற்றியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment