தமிழ் சினிமாவின் இரு பெரும் இமயங்களான இசைஞானி இளையராஜாவும், உலக நாயகன் கமல்ஹாசனும் கலையில் மட்டுமல்ல, இப்போது தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
கமலின் உயர்நீதிமன்ற வழக்கு:
தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றைத் தனது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை இன்று (ஜனவரி 11, 2026) தொடர்ந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமலின் புகைப்படங்கள் மற்றும் அவரது திரைப்பட வசனங்களை டி-சர்ட்டுகளில் அச்சிட்டு விற்பனை செய்ததைச் சுட்டிக்காட்டி இந்த உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. “எனது பல ஆண்டு உழைப்பால் உருவான பிம்பத்தை (Persona), அனுமதியின்றி யாரும் லாபத்திற்காகச் சுரண்டக்கூடாது” என்பதே கமலின் வாதம்.
இளையராஜா போட்ட ‘ராயல்டி’ விதை:
கமலின் இந்த நடவடிக்கை, சில காலத்திற்கு முன்பு இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோரி நடத்திய சட்டப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது.
“நான் உருவாக்கிய இசையை என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது, என்றும் பாடல்களுக்கான ராயல்டி உரிமையை நிலைநாட்டினார். நான் என்ற ஆளுமையையே (Brand) என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது” என்று தனது ‘ஆளுமை உரிமையை’ (Personality Rights) நிலைநாட்டுகிறார். இளையராஜா தனது இசைக்காகப் போராடியபோது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர் காட்டிய அதே ‘காப்புரிமை’ (Copyright) பாதையில் இப்போது கமல்ஹாசனும் அடியெடுத்து வைத்துள்ளார்.
வணிகச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி:
டி-சர்ட் முதல் காபி மக் வரை பிரபலங்களின் முகங்களைப் போட்டு கல்லா கட்டும் நிறுவனங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் (Deepfake) காலக்கட்டத்தில், தனது குரலும் உருவமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கமல் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளார்.
நண்பர்களின் ஒரே ரூட்:
திரையில் மேஜிக் செய்த இந்த நண்பர்கள், இப்போது திரைக்கதையைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் ‘சட்ட ரீதியான தற்காப்பு’ (Legal Defense) என்ற புள்ளியில் இணைந்து நிற்கிறார்கள்.