ஆட்டுக்குத் தாடியும்.. நாட்டுக்கு ஆளுநரும் எதுக்கு?.. அண்ணா வழியில் ஸ்டாலின் ஆவேசம்!

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் பதவி குறித்தும், திராவிட இயக்க முன்னோடிகளின் நிலைப்பாடு குறித்தும் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாவின் கொள்கை:
சட்டசபையில் பேசிய முதலமைச்சர், “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா அன்று சொன்னார். அந்த வார்த்தைகள் இன்றும் சமூக நீதி மண்ணில் உண்மையாகவே இருக்கின்றன. அதே கருத்தைத்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் தனது வாழ்நாள் முழுவதும் வழிமொழிந்தார்,” என்று அண்ணாவின் புகழ்பெற்ற வரிகளை நினைவு கூர்ந்தார்.

நாங்கள் விலகவில்லை:
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்களது கொள்கை. ஆனால், அந்தப் பதவி அரசியலமைப்புச் சட்டப்படி இருக்கும் வரை, அதற்குரிய மரியாதையை அளிப்பதில் அண்ணாவோ, கலைஞரோ என்றுமே தவறியதில்லை.

அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும், ஆளுநர் பதவிக்குரிய கண்ணியத்தைக் காத்தனர். அந்த வழியைப் பின்பற்றி, நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகாமல் செயல்பட்டு வருகிறேன். இந்த அரசும் அந்த மரபைச் சரியாகக் கடைபிடித்து வருகிறது,” என்றார்.

மரியாதையும்… உரிமையும்:
ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியது இந்த அவைக்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று குறிப்பிட்ட முதல்வர், ஒரு முதலமைச்சராகத் தனது கடமையையும் மரியாதையையும் செய்த போதிலும், கொள்கை ரீதியாகத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அண்ணாவின் பழைய பொன்மொழியைச் சுட்டிக்காட்டியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment