தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு மர்மமான மற்றும் கணிக்க முடியாத களமாக மாறியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், பாரம்பரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் அடிமட்ட கணக்குகளை முற்றிலுமாக நிலைகுலைய செய்துள்ளது.
ஓட்டுமொத்தமாக தேர்தல் முடிவுகளை கணிக்கும்போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசும் திமுக நிர்வாகிகள் கூட, தொகுதி வாரியாக பார்க்கும்போது தவெக எவ்வளவு வாக்குகளை பிரிக்கும், யாருடைய வாக்குகளை அதிகம் கொண்டு செல்லும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களே தவெகவின் ‘வீச்சு’ தங்களுக்கு பெரும் சவாலாக இருப்பதை ரகசியமாக ஒப்புக்கொள்வது, களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது.
விஜய்யின் இந்த விஸ்வரூபத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அவர் உருவாக்கியுள்ள ‘இளைஞர் படை’ ஆகும். மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கு தங்கள் சொந்த ஊரில் அல்லது தெருவில் இருக்கும் இளைஞர்களின் மனநிலை என்னவென்றே தெரியாமல் போனது ஒரு மிகப்பெரிய பலவீனம். இதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாமல், டிஜிட்டல் உலகில் மூழ்கியிருந்த ‘டிஜிட்டல் யூத்ஸ்’ என்று அழைக்கப்படும் தலைமுறை, இந்த முறை ஒட்டுமொத்தமாக விஜய் பக்கம் சாய்ந்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டுமே கவனித்த சூழலில், எதார்த்தமாக மாற்றத்தை விரும்பிய இளைஞர்கள் விஜய்யை ஒரு கருவியாக கையில் எடுத்துக்கொண்டனர். திமுகவின் இளைஞரணி மாநாடுகள் மற்றும் கட்டமைப்புகளை தாண்டி, எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாத புதிய தலைமுறை வாக்காளர்கள் விஜய்யின் ‘குட்டீஸ்’ என்ற அழைப்பிற்கும், மாற்றத்திற்கான முழக்கத்திற்கும் கட்டுப்பட்டு வாக்களித்துள்ளது பாரம்பரியக் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளாது.
இந்தத் தேர்தலின் மற்றொரு முக்கிய அம்சம், காசுக்கும் ஓட்டுக்கும் இடையிலான அந்த பழைய சங்கிலித் தொடர் உடைந்து போயிருப்பதுதான். ஒரு ஓட்டுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்தாலும், மக்கள் அதை பெற்றுக்கொண்டு தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் துணிச்சலை பெற்றுள்ளனர்.
குறிப்பாக, தவெகவிற்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் எவ்வித பணமும் வாங்காமல் அல்லது பணத்தை பெற்றுக்கொண்டாலும் தங்கள் கொள்கைக்காக விஜய்க்கு வாக்களித்துள்ளனர். இது ‘காசு வாங்கினால் ஓட்டு போட வேண்டும்’ என்ற பழைய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. வீடுகளில் உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியையும் தவெக பக்கம் திருப்பியுள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விஜய்யின் வருகை தங்களுக்கு தான் சாதகமாக முடியும் என்று வெவ்வேறு கணக்குகளை போட்டு வருகின்றன. திமுக தரப்பில், மகளிர் உரிமை தொகை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு சென்றடைந்திருப்பதால் தங்களுக்கு வெற்றி உறுதி என்று நம்புகின்றனர். அதே சமயம், அதிமுக தரப்போ விஜய் பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் திமுகவின் வாக்கு வங்கியிலிருந்து தான் செல்லும் என்பதால், தங்கள் இரட்டை இலை சின்னத்தின் நிலையான வாக்குகளை வைத்துக்கொண்டு எளிதாக 120 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிடலாம் என்று கணக்கு போடுகின்றனர்.
மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தங்களுக்குக்கிடைக்க போகும் தொகுதிகள் மூலம் ஆட்சியை பிடிக்கலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தவெகவோ தாங்கள் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் தங்களின் எதிர்கால வெற்றியின் அடித்தளம் என்றும், 140 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் உறுதியாக நம்புகின்றனர்.
இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் என்பது ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை தேர்தலில் போட்டியிடாத, எவ்வித அனுபவமும் இல்லாத ஒரு புதிய கட்சி, 30 இடங்களோ அல்லது 120 இடங்களோ, எவ்வளவு வென்றாலும் அது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படும். “ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்ப போகிறேன்” என்று விஜய் மேடைகளில் பேசியது இளைஞர்களிடையே ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் கதவுகள் திறக்கப்படும்போது, தமிழக மக்களின் உண்மையான மனநிலை வெளிப்படும். மூன்று தரப்பும் தங்களுக்குத் தான் வெற்றி என்று ஆதாரங்களுடன் வாதிட்டாலும், மக்களின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது. இந்த மும்முனைப் போட்டியில் யார் வென்றாலும், தமிழக அரசியல் இனி பழையபடி இருக்காது என்பது மட்டும் உறுதி.