விஜய் ஆட்சி அமைக்கனும்ன்னா 50% வேணுமா? கேட்கவே நல்லா இருக்கே! ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரு பக்கம் திரளப்போகுதுன்னு உங்க புள்ளிவிவரமே சொல்லுது… கூட்டணி இல்லைன்னா கோட்டைக்கு போக முடியாதுன்னு நினைச்சீங்களா? கூட்டணியை வைச்சு நீங்க காலத்தை ஓட்டுறீங்க… நாங்க தனி ஒருவனா நின்னு சரித்திரத்தை மாத்த போறோம்! இது சிங்கிள் ஃபேக்டர் இல்லை… இது சிங்கம் மாதிரி ஒரு எண்ட்ரி!

தமிழகத் தேர்தல் களம் தற்போது தேசிய அளவிலான செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் வருகை மற்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியமைக்கும் என்பதை சதவீத அடிப்படையில் விளக்கியுள்ளது. விஜய் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வாக்குகளை பெற்றால், அது திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி விளிம்பை எப்படி பாதிக்கும் என்ற விவாதம் தற்போது சூடுபிடிதிருப்பதை காண முடிகிறது. குறிப்பாக, விஜய் ஒரு தனி சக்தியாக களம் காண்பதால், அவர் ஆட்சி அமைக்க தேவையான வாக்குச்சதவீதம் மற்ற கட்சிகளை காட்டிலும் மிக அதிகமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த கணிப்புகளின்படி, திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகள் தலா 30 முதல் 33 சதவீத வாக்குகளை பெற்றாலே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். இதற்கு காரணம், அந்த கட்சிகள் வைத்துள்ள வலுவான கூட்டணி கட்டமைப்புதான். தங்களது சொந்த வாக்கு வங்கியுடன் கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் சேரும்போது, குறைந்த சதவீத வாக்குகளிலேயே அவர்களால் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்ற முடிகிறது. ஆனால், விஜய் தலைமையில் தவெக தனித்து போட்டியிடும் பட்சத்தில், அவர் ஆட்சி அமைக்க சுமார் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டியிருக்கும் என்ற கணக்கீடு முன்வைக்கப்படுகிறது. இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு ஏன் இவ்வளவு அதிக வாக்கு சதவீதம் தேவைப்படுகிறது என்ற கேள்விக்கு, அவரிடம் தற்போது இருக்கும் ‘சிங்கிள் ஃபேக்டர்’ எனப்படும் தனிநபர் செல்வாக்கு மட்டுமே பதிலாக உள்ளது. தவெகவிடம் தற்போது பெரிய அளவிலான கூட்டணி கட்சிகள் இல்லை என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் அக்கட்சி தனித்து நின்று பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டியுள்ளது. ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பல முனை போட்டிகளால் சிதறும்போது, கூட்டணி பலம் இல்லாத ஒரு கட்சிக்கு வெற்றி இலக்கை எட்டுவது கடினமான காரியமாக மாறுகிறது. இதுவே விஜய்யின் அரசியல் பயணத்தில் இருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்ப சிக்கலாக கருதப்படுகிறது.

இதுவரை விஜய்யின் பலம் என்பது அவரது ரசிகர் மன்றங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தை வைத்து மட்டுமே மதிப்பிடப்பட்டு வருகிறது. அவரது வாக்கு வங்கி இன்னும் தேர்தல் களத்தில் சோதித்து பார்க்கப்படவில்லை. அவர் எவ்வளவு வாக்குகளை மற்ற கட்சிகளிடம் இருந்து பிரிப்பார் அல்லது புதிய வாக்காளர்களை எவ்வளவு ஈர்ப்பார் என்பதற்கு எந்தவொரு தரவுகளும் இதுவரை யாரிடமும் இல்லை. இதனால், தேசிய ஊடகங்கள் விஜய்க்கு அதிக வாக்கு சதவீதம் தேவை என இலக்கு நிர்ணயிப்பது, அவரது தனித்த போட்டியின் சவாலை உணர்த்துவதாகவே அமைகிறது.

இருப்பினும், இந்த தேர்தல் என்பது விஜய்யின் உண்மையான பலம் என்ன என்பதை மக்கள் உணர்வதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். 50 சதவீத வாக்குகள் என்பது கடினமாக தெரிந்தாலும், தமிழக அரசியலில் நிலவும் ஆட்சி எதிர்ப்பு அலை மற்றும் மாற்றத்திற்கான தேடல் ஆகியவை எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கலாம். மே மாதம் தேர்தல் முடிவுகள் வரும்போது, விஜய் ஒரு கிங்-மேக்கராக உருவெடுப்பாரா அல்லது கூட்டணி கணக்குகளை தகர்த்து ஒரு தனி சக்தியாக விஸ்வரூபம் எடுப்பாரா என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தல் முடிவுகளே எதிர்காலத் தமிழக அரசியலில் கூட்டணிகள் அவசியமா அல்லது தனிநபர் செல்வாக்கே போதுமானதா என்பதை தீர்மானிக்கும்.

Leave a Comment