automobile
எஸ்யுவி வடிவில் களமிறங்கும் சென்ச்சுரி.. வேற லெவல் அப்டேட் கொடுத்த டொயோட்டா!
டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய சென்ச்சுரி எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வெல்ஃபயர் அறிமுக நிகழ்வில் டொயோட்டா நிர்வாகம் சார்பில் இந்த தகவல் வழங்கப்பட்டது. புதிய எஸ்யுவி மாடல் அந்நிறுவனத்தின் செடான் மாடலுடன் இணைகிறது.
1967 முதல் டொயோட்டா நிறுவனம் தனது சென்ச்சுரி மாடலை விற்பனை செய்து வருகிறது. அதிக பிரபலமான சென்ச்சுரி செடானை தொடர்ந்து, புதிய எஸ்யுவி மாடல் சென்ச்சுரி பேட்ஜ் செய்யப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். ஜப்பான் நாட்டில் டொயோட்டா தனது சென்ச்சுரி செடான் மாடலை விற்பனை செய்து வருகிறது.
செடான் போன்று இல்லாமல், சென்ச்சுரி எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் பல நாடுகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. டொயோட்டா கிரவுன் பிரான்டை போன்றே, புதிய சென்ச்சுரி மாடலும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய சென்ச்சுரி கார், மோனோக் எஸ்யுவி-யாக இருக்கும் என்றும், இது ஆஃப் ரோடு மாடலாகவும் இருக்கும் என தெரிகிறது.
புதிய எஸ்யுவி மாடல் மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் டொயோட்டா கிரான்ட் ஹைலேன்டர் எஸ்யுவி மாடலும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் வீல்பேஸ் கிரான்ட் ஹைலேன்டர் மாடலில் உள்ளதை போன்றும், கார் அளவில் பெரியதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது விற்பனை செய்யப்படும் சென்ச்சுரி செடான் மாடலில் வி12 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், சென்ச்சுரி எஸ்யுவி மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய கார் பற்றிய இதர விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
டொயோட்டா சமீபத்தில் அறிமுகம் செய்த வெல்ஃபயர் மாடல் லெக்சஸ் LM மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய வெல்ஃபயர் மாடலில் 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய வெல்ஃபயர் மாடலில் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.