latest news
`ஓடி ஒளிபவன் அல்ல – மக்களை சந்திச்சீங்களா?’ – ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், இந்தப் பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்போடு பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டுத்தான் உங்களுக்குப் பதிலளித்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `முதலமைச்சர் ஏன் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். அந்த வார்த்தையை எதற்குப் பயன்படுத்துறீங்க. ஓடி ஒளியலைனா, பாதிக்கப்பட்ட உடனே மக்களை நேரடியா போய் சந்திச்சு ஆறுதல் சொல்லிருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லல? பயமா? இன்றைக்கு யார் முதலமைச்சர்? யாரு டிஜிபி?
இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுனு கூட்டணிக் கட்சித் தலைவர் சொல்றாரு. வெட்கமாக இல்லையா? முதலமைச்சருக்கே நடந்த சம்பவம் தெரியவில்லை என்றால் நாட்டு மக்களை யார் காப்பாற்றுவது? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கூடிய டிஜிபிக்கு இது தெரியாது என்றால், யார் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது? வேண்டுமென்றே திட்டமிட்டு அவர்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம், தாங்கிப் பிடிக்கிறார்கள்.
இது தவறு. உண்மை என்ன என்பதை வெளியில் கொண்டுவர வேண்டும். அதுதான் எதிர்க்கட்சியோட கடமை. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி தர்மம் என்று இருந்தாலும், மக்கள் பிரச்னை என்று வருகிற போது அதற்கெல்லாம் இடமளிக்காமல் உண்மை செய்தியை மக்களிடம் கொண்டுசேர்ப்பதுதான் உண்மையான கட்சிக்கு அடையாளம்’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.