india
நாடாளுமன்றத்தின் இடைக்கால தலைவரை தேர்ந்தெடுப்பதில் கூட முறைகேடா? எரிச்சலில் இந்தியா கூட்டணி…
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 293 தொகுதியை கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றிருக்கிறார்.
இந்நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. மக்களவையின் புதிய எம்பிக்கள் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில் பதவி ஏற்க இருக்கின்றனர்.
ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னதாக இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பார்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் அந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர்.
பொதுவாக மக்களவையில் அதிக முறை தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் தான் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் பார்க்கும்போது காங்கிரஸை சேர்ந்த கொடிகுன்னில் சுரேஷ் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
8 முறை வென்ற இவரை விடுத்து 7 முறை வென்ற பார்த்ருஹரி தேர்வு செய்யப்பட்டதுக்கு கண்டனம் வலுத்து இருக்கிறது. மேலும் தலித் சமூகத்தினை சேர்ந்தவர் என்பதால் தான் சுரேஷ் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.