india
திருமண மோசடி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி… அலறும் 2 மாநில மாப்பிள்ளைகள்!
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பல திருமணங்கள் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அம்மாநிலங்கள் அவர் ஏமாற்றிய மாப்பிள்ளைகளைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த திருமண வயதை ஒட்டிய இளைஞர்களைக் குறிவைத்து திருமண மோசடியில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட உ.பி போலீஸார்,ம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட 7 பேர் கும்பலைக் கடந்த மே 6-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் உ.பியின் முஸாஃபர் நகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் உ.பி போலீஸுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு வழக்கமாக நடக்கும் மருத்துவ பரிசோதனை அந்த மோசடி மணப்பெண்ணுக்கும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த உ.பி போலீஸ், அந்தப் பெண்ணின் மோசடியால் பாதிக்கப்பட்ட மணமகன் குடும்பத்தினர் பற்றி விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வழக்கமாக ஒரு குடும்பம் போல போய் திருமணம் செய்துவிட்டு, சில நாட்களில் பணம், நகைகளோடு அங்கிருந்து மாயமாவதுதான் குறிப்பிட்ட அந்த மோசடி கும்பலின் வழக்கமாக இருந்திருக்கிறது.
இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, இந்த வகையில் மூன்று பேரை ஏமாற்றியிருப்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார், இதுகுறித்து உ.பி மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
முதற்கட்டமாக அந்த மூன்று மணமகன்களையும் வரவழைத்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.