india
இந்துவா என்பதை அறிய டிஎன்ஏ சோதனை… கல்வி அமைச்சரின் களேபர பேச்சு….
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். கல்வி அமைச்சராக மதன் திலாவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 21ந் தேதி மதன் திலாவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கல்வி அமைச்சரான மதன் திலாவர் பேசும்போது, ஒருவர் இந்துவா இல்லையா என்பதை அவர்களின் டிஎன்ஏ வைத்து கணிக்க வேண்டும். அப்படி அவர்கள் இந்து இல்லாமல் இருந்தால் அவர்கள் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனப் பேசி இருந்தார். கல்வி அமைச்சரின் இந்த பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது.
மதன் திலாவரின் இந்த பேச்சால் ராஜஸ்தானில் பிரச்னை மூண்டு இருக்கிறது. சனிக்கிழமை ஆதிவாசி கட்சியினர் போராட்டம் நடத்தினர். பாரத ஆதிவாசி கட்சி தலைவர் ராஜ்குமார் கோட் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மதன் திலாவர் வீடு வரை ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், மதன் திலாவர் பெரிய தவறு செய்துவிட்டார்.
அவர் மன்னிப்பு கேட்டு உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. ராஜஸ்தான் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டம் மத சுதந்திரத்தினை கொடுத்து இருக்கிறது. எங்கள் மாதிரிகளை மதன் திலாவருக்கு தபால் மூலம் அனுப்புவோம் எனவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பேசிய மதன் திலாவர், ஆதிவாசிகள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் இந்துக்கள் தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.