india
மீண்டும் மீண்டுமா… 15 நாட்களில்; 10-வது சம்பவம்- பதறும் பீகார்!
பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும்.
பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இடிந்துவிழுந்த 3 பாலங்களும் 30 முதல் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்திருப்பதோடு, இதுகுறித்த துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
ஒரே நாளில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தும் முதலமைச்சர் நிதீஷ் குமார் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என எதிர்க்கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கிடையே, பீகாரில் உள்ள பழைய பாலங்கள் மற்றும் சாலைகள் குறித்து ஆய்வினை உடனடியாக நடத்த சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் சைத்தன்ய பிரசாத், `இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் போன்றவை மிகவும் பழமையானவை’ என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், `உரிய பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையோடு அவை கட்டப்படவில்லை என்றும், அந்தப் பாலங்கள் கட்டப்படும்போது போதுமான அளவுக்கு அஸ்திவாரங்கள் தோண்டப்படவில்லை. இதனாலேயே, இந்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சைவான் மாவட்டத்தின் தியோரியா பகுதியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர், தெக்ரா பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் இதேபோல் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யார் பொறுப்பாளி என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பீகாரில் வலுத்துவருகிறது.