india
கேம்ப்பில் இருந்து திடீரென மாயமான 2 பெண் காவலர்கள்… வலைவீசித் தேடும் பி.எஸ்.எஃப்!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான இரண்டு பென் காவலர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
குவாலியரை அடுத்த டேகன்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) பயிற்சி மையம் அமைந்திருக்கிறது. இந்தப் பயிற்சி மையத்தில் ஜபல்பூரைச் சேர்ந்த ஆகான்ஷா நிஹார் மற்றும் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஷஹானா காண்டூன் ஆகியோர் காவலர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 6-ம் தேதி பயிற்சி மையத்தில் இருந்து திடீரென மாயமாகியிருக்கிறார்கள்.
அதன்பிறகு பயிற்சி மையத்துக்குத் திரும்பாத அவர்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கியபோதுதான், செல்போன் மூலம் சந்தேகப்படும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர்களின் செல்போன் ரெக்கார்டுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, டெல்லி, ஹவுரா மற்றும் மேற்குவங்கத்தின் பெஹ்ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்றிருந்ததும் தெரியவந்தது. அந்தந்த ஊர்களில் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், எல்லையிலும் துணை ராணுவப் படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஆகான்ஷா மாயமானது குறித்து குவாலியன் போலீஸில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரின் தாயார் ஊர்மிளா குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஷஹானாவின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து வாய்திறக்க மறுப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.