india
ஆடிக்கார்… மாற்றுத்திறனாளி… சாதி சான்றிதழ்… மோசடிக்கு மேல் மோசடி… பயிற்சி பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஐஏஎஸ் பூஜா…
பயிற்சி பணியில் இருக்கும் போது தனக்கென தனி அலுவலகம், சொந்தமாக வீடு, கார் என கேட்டு அடாவடி செய்தார் ஐஏஎஸ் பூஜாவை பயிற்சி பணியை உடனே நிறுத்தி வைத்து மத்திய பயிற்சி மையத்துக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனேவில் ஐஏஎஸ் பயிற்சி பணியில் இருந்தவர் பூஜா கேட்கர். இவர் பணிக்கு சேரும்போது தனக்கென தனி அலுவலகம், தனி வீடு என பல வசதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையான நிலையில் பூஜா புனேவில் இருந்து வாசிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் பூஜா கண் குறைபாடு இருக்கும் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார். இதிலும் சர்ச்சை இருப்பதாக பிரச்சினை எழுந்த நிலையில் பூஜாவின் மீது விசாரணை நடத்த ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூஜாவை வாசிம் மாவட்டத்தில் பயிற்சி பணியை உடனே நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஜா கொடுத்த கண் குறைபாடு சான்றிதழில் குளறுபடி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏனெனில், 2018 மற்றும் 21 ஆம் ஆண்டு அகமத் நகரில் வாங்கப்பட்ட சான்றிதழை பூஜா கொடுத்திருந்தார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சோதனைக்காக வரவேண்டும் என கூறப்பட்டிருந்தாலும், கொரோனவை காரணம் காட்டி அதை தவிர்த்து இருந்தார்.
இருந்தும் அவருக்கு பயிற்சி பணி வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பூஜாவின் சாதி சான்றிதழிலும் பிரச்னை இருப்பதாக இன்னொரு சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பூஜாவை உடனே வாசிம் பணியை நிறுத்திவிட்டு முசோரியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி தேசிய பயிற்சி அகாடமிக்கு 23ஆம் தேதிக்குள் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
பூஜா தனி அலுவலகம் கேட்ட வாட்ஸ் அப் சாட்டிங் தகவல்கள் இணையத்தில் கசிந்த நிலையில் அவர் தன்னுடைய காரில் சட்டவிரோதமாக சிகப்பு மற்றும் ஊதா சைரன்களை ஒளிர விட்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். மேலும் அந்த ஆடி காரின் பதிவுக்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பதிவுநிறுத்தப்பட்டு ஆடி காரும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.