india
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சூழ்ந்த வெள்ளம்… 10 அடியில் தத்தளித்து உயிரிழந்த 3 மாணவர்கள்…
இந்தியா தலைநகரமான டெல்லியில் சமீபகாலமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ராவ் ஐஏஎஸ் அகாடமியில் சூழ்ந்த வெள்ளத்தால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று முன்தினம் டெல்லியில் கடும் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து வந்த நிலையில் ராவ் ஐஏஎஸ் அகாடமி தரைத்தளம் முழுவதும் வெள்ள நீர் உள்ளே இறங்கியது. அந்த அகாடமியில் அடித்தளத்தில் நூலகம் இருப்பதால் பயிற்சி மாணவர்கள் அங்கு அதிகம் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்தவுடன் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்கிய மாணவர்களை மீட்க பேரிடர் குழு அங்கு விரைந்து வந்தது. இருந்தும் பத்து முதல் 12 அடி வெள்ள நீரில் தத்தளித்து தப்பிக்க முடியாமல் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது, அகாடமிக்குள் வெள்ளநீர் எப்படி வந்தது என தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.. மாணவர்கள் தரப்பில் கூறும் போது, நாங்கள் நூலகத்திற்குள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். காவலர் உடனே ஓடி வந்து வெள்ளநீர் வருகிறது வெளியேறுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
முதலில் மெதுவாக தான் நீர் உள்ளே வந்தது. அதனால் முடிந்த அளவு அனைவரும் வெளியேற முயற்சித்தோம். தொடர்ந்து வெள்ள நீரின் வேகம் அதிகரிக்க நூலகத்திற்குள் எட்டு மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். அதில் சிலரை மீட்க முடிந்த நிலையில் மூவர் இறந்து விட்டது அதிர்ச்சியான சம்பவம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.