வெற்றி கொண்டாட்டத்தில் 11 உயிரிழப்புகள்… ஆர்.சி.பி. அதிகாரி அதிரடி கைது!

ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். 2025 கோப்பையை வென்ற கொண்டாட்டம் 11 பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தின் வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து ஆர்.சி.பி. அணியின் விளம்பரம் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசலே உள்பட நான்கு அதிகாரிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

கூட்ட நெரிசலில் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கைதான நிகில் சோசலே இன்று அதிகாலை மும்பை புறப்பட இருந்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிகில் சோசலே ஆர்.சி.பி. அணியின் விளம்பரம் மற்றும் வருவாய் பிரிவு தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். முன்னதாக இவர் டியாகோ இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கூட்ட நெரிசலை தொடர்ந்து இணை ஆணையர் அக்ஷய் தலைமையிலான குழு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் இன்று குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Leave a Comment