இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன் – டெண்டுல்கர்’ கோப்பைக்கான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அதிகபட்சமாக 147 ரன்களையும், ரிஷப் பண்ட் 134 ரன்களையும், ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் அடித்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) கைப்பற்றியுள்ளார்.
மேலும் இந்தியா அல்லாது வெளிநாட்டு மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது கபில் தேவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னதாக கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.
போட்டியை பொருத்தவரை இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.