சுப்மன் கில், வேகபந்துவீச்சாளர்கள் மிரட்டல்… 2-வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களை விளாசிய சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களை குவித்தார்.

இவர் மட்டுமின்றி ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், ரிஷப் பண்ட் 65 ரன்கள், கேஎல் ராகுல் 55 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களை அடித்து டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 608 ரன்களை துரத்தும் கடினமான சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. புதிய பந்தில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினர். இந்திய வீரர் ஆகாஷ் தீப் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்தினார். மறுப்பக்கம் முகமது சிராஜ் ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றினார்.

இருவரின் அபார பந்துவீச்சு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது. இன்றைய கடைசி மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 536 ரன்களும், இந்திய அணி வெற்றிக்கு வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான ஃபீல்டிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்களின் சொதப்பல் ஆட்டத்தால் தோல்வியை தழுவியது. தோல்வியுடன் இரண்டாவது போட்டியில் ஆடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட இந்திய அணி தற்போது வெற்றி பெறும் தருவாயில் தான் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்க இருக்கிறது.

Leave a Comment