என்ன இருந்தாலும் அவருக்கு இதுதான் நல்லது… கில் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து

இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி விளையாடுவதற்கும் சுப்ன் கில் புதியவர் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இரு சவால்களையும் எடுத்துக் கொண்ட சுப்ன் கில் வெளிநாட்டு களத்திலும் தனது அசாத்திய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, அதிக ரன்களை குவித்து வருகிறார். ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 147 ரன்களை விளாசிய சுப்மன் கில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் சதம் விளாசியுள்ளார்.

அடுத்தடுத்த சதங்களால் சுப்மன் கில் தற்போது விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன் மற்றும் விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து இந்திய கேப்டனாக பொறுப்பேற்றதும் ஆடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவர் இதனை நான்காவது வீரராக களமிறங்கி செய்திருக்கிறார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடுவதே அவருக்கு சரியானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர் இயற்கையில் மூன்றாவது வீரராக விளையாடுவது சிறப்பாக இருக்கும், என்றார்.

மேலும், சுப்மன் கில்-ஐ இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் உடன் ஒப்பிட்ட நாசர் ஹூசைன், இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் செய்ததை அவர் தற்போது செய்து கொண்டிருக்கிறார். மூன்றாவது வீரராக ஆடுவதற்கு உங்களிடம் ஜோ ரூட் போன்ற வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர் என்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். உங்களது நான்காவது வீரர் எப்போதும் பலம் வாய்ந்த ஒருவராகவே இருந்துள்ளார். ஆனாலும், சுப்மன் கில் இயற்கையில் மூன்றாவது வீரராக களமிறங்கி ஆடுவது சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன், என்று கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராகவே தொடங்கினார். பிறகு அவர் மூன்றாவது வீரராக புஜாராவுக்கு மாற்றாக ஆட வைக்கப்பட்டார். ஆனால், மூன்றாவது வீரராக சுப்மன் கில் அதிக ரன்களை குவிக்க தடுமாறினார். இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை அவரது சராசரி 35 ஆகவே இருந்தது. ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருந்த போது டெஸ்ட் அணியில் இணைந்த சுப்மன் கில் தற்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றங்களை அடைந்துள்ளார். இது நேற்றைய ஆட்டத்தில் நிரூபனமாகி இருக்கிறது.

Leave a Comment